Share via:

பத்தாவது முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மூத்த அமைச்சர்
துரைமுருகன் இலாகா பறிக்கப்பட்ட விவகாரத்துக்குப் பின்னணியில் அமலாக்கத்துறை கைது எச்சரிக்கை
இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அமைச்சரவை மாற்றம்
நடந்ததாக குறிப்பிடப்படுகிறது.
யாரும் எதிர்பார்க்காத வகையில்திடீரென நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம்
இருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கை வளத்துறை சட்டத்துறை அமைச்சர் ரகுபதிக்கு
மாற்றி ஒதுக்கப்பட்டது. அமைச்சர் ரகுபதியிடம் இருந்த சட்டத்துறை துரைமுருகனுக்கு ஒதுக்கப்பட்டது.
இதன் பின்னணியில் மணல் கான்ட்ராக்ட் மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கையை தி.மு.க. எதிர்பார்ப்பதாக
சொல்லப்படுகிறது.
இது குறித்து பேசும் தி.மு.க.வினர், ‘’புதுக்கோட்டை ராமச்சந்திரன்
குரூப் மணல் கான்ட்ராக்ட் எடுத்ததில் சர்ச்சை அதிகமானதை அமலாக்கத் துறை கண்காணித்தது.
மணல் குவாரியை ரெய்டு செய்து சாட்டிலைட் மூலமாக
பல ஆவணங்களை திரட்டியது. மேலும் அதிகாரிகள் முதல் அந்த மாவட்ட கலெக்டர் வரை அழைத்து
விசாரணை செய்தது. இதற்காக சம்பந்தப்பட்ட ஆட்சியர்களும், தமிழக அரசும் உச்ச நீதிமன்றம்
வரை சென்றன. தற்போது கூட அந்த வழக்கு நிலுவையில்தான் உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த ஜனார்த்தனன்
ரெட்டி சட்டவிரோதமான சுரங்கம் தோண்டி இரும்புத் தாது சுரங்கத்தை முழுவதுமாக மோசடி செய்த
வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாகவும் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து
ஜனார்த்தனன் ரெட்டி உட்பட 4 பேருக்கு 7 வருடம் சிறை தண்டனை உறுதியாகி உள்ளது.
கர்நாடகாவை அடுத்து தமிழ்நாட்டிலும் இந்த நடவடிக்கை தொடரலாம்.
திமுக கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் பிரச்சனையில் சிக்கினால்
கட்சியைப் பாதிக்கும் என்பதாலே அவரை அந்த பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.
மூத்த தலைவர் என்பதால் சட்டத்துறையைக் கொடுத்து நிலைமையைச் சமாளித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் நெருங்கிய நபர்களிடம், துரைமுருகனுக்கு உடல் நிலை ஒத்துழைப்பு
கொட்க்கவில்லை. ஞாபகமறதியால் அவதிப்படுகிறார். அதனாலே பதவி மாற்றம் நடந்துள்ளது என்று
சமாளிக்கிறார்கள். ஐந்து வருடம் ஆட்சி செய்த அதிமுகவினர் மீது எந்த குற்றச்சாட்டுகளும்
இல்லை. நான்கு வருடத்தில் திமுகவினர் கைது பயத்தில் இருக்கிறார்கள்’’ என்று வருந்துகிறார்கள்.
இப்போது துரைமுருகன் மாற்றப்பட்ட பிறகாவது மணல் உட்பட இயற்கை வளக் கொள்ளை முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் மக்கள் எண்ணம்