Share via:
பாட்டாளி மக்கள் கட்சியில் முட்டல் மோதல் நடைபெற்று வருகிறது.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் தினம் ஒரு திருப்பம் நடக்கிறது.
அந்த வகையில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம்
அன்புமணி குரூப்பை அலறவிட்டுள்ளது.
புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான பட்டானூரிலுள்ள சங்கமித்ரா
திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் 300-க்கும் மேற்பட்ட
பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட
செயலாளர், தலைவர் என 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற பாமகவின் சிறப்பு பொதுக்குழுவில்
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் பொதுக் குழுவில் 37 தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. முக்கியமாக பாமகவில் புதிய விதி 35 உருவாக்கம் செய்யப்பட்டு, அதன்மூலம்
சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு
தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டாக்டர்.ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம் வழங்கி
தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரமும் டாக்டர்
ராமதாசிற்கு மட்டுமே வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழுவில் பாமக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ்
தொடர்ந்து செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் ஒருமனதாக அங்கீகாரம் அளித்தது.
2026 சட்டமன்ற பொது தேர்தலில் பாமக அதிக இடங்களில் மிகப்பெரிய
வெற்றியைப் பெற உரிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வெற்றி கூட்டணியை உருவாக்க
டாக்டர் ராமதாஸுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது. அதோடு வன்னியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில்
10.5% தனி இட ஒதுக்கீட்டிற்கு சட்டம் ஆக்கப்பட்டும் நிறைவேற்றாமல் இருப்பதற்கு பாமக
நிறுவனர் தலைமை மீண்டும் போராட்டம்
இதில் ஹைலைட் என்னவென்றால் அன்புமணி குறித்த தீர்மானம். அதாவது,
புத்தாண்டு பொது குழுவில் அன்புமணி மைக்கை தூக்கி போட்டது. தொடர்ந்து கட்சிக்கு கட்டுப்பாடாமல்
கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாக ஒழுங்கு நடவடிக்கை குழு கருதுகிறது. தவறான கட்சி நடவடிக்கை,
ஒட்டு கேட்கும் கருவி வைத்தது, பொதுக்குழு என்ற பெயரில் கூட்டம் நடத்தி ஒரு இருக்கை
போட்டு நிறுவனரை அவமானப்படுத்திய அநாகரீக செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர் மீது ஒழுங்கு
நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில்
நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த ஓராண்டுக்கு தலைவர் பதவியில் அன்புமணி நீடிப்பார்
என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என்றும் கூறப்பட்டது.
இந்த பொதுக்குழுவுக்கு அன்புமணி பக்கமிருந்து கடும் கண்டனம் வந்திருக்கிறது.
அன்புமணியின் ஆதரவாளராக இருக்கும் பாமக செய்தித் தொடர்பாளர் கே.பாலு, ‘’பாட்டாளி மக்கள்
கட்சியின் அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சியின்
பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின்
தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட
கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.
அதன்படியான பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த
ஆகஸ்ட் 9&ஆம் நாள் மாமல்லபுரத்தில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின்
தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் முறைப்படி நடத்தப்பட்டது. அதில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி
தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், புதுச்சேரி பட்டானூரில் இன்று நடத்தப்பட்ட
கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்
பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது’’ என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் கமிஷனில் ராமதாஸ் தரப்பும் முறையீடு செய்திருக்கிறது.
இந்நிலையில், அன்புமணியை நீக்கினால் அது எந்த வகையில் கட்சியில் எதிரொலிக்கும், தேர்தலை
எப்படி சந்திக்கும் என்று எக்கச்சக்க கேள்விகள் எழுந்துள்ளன.