Share via:
அண்ணா தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால் கடந்த
நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளாவது வென்றிருக்கலாம். பெரும்பான்மை கிடைத்திருக்கும்.
அந்த வாய்ப்பை கெடுத்தவர் அண்ணாமலை என்று கூறப்படுவதன் அடிப்படையில் புதிய தலைவர் மாற்றம்
கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதனாலே அண்ணாமலை இப்போது, ‘பதவிக்காக நான் அரசியலுக்கு
வரவில்லை’ என்று தத்துவம் பேசி வருகிறார்.
புதிய பா.ஜ.க. மாநிலத் தலைவர் அறிவிப்பு வரும் 10ம் தேதிக்குள்
அறிவிக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்படுவது அண்ணாமலையின் ஆதரவாளர்களை கடும் ஆத்திரத்துக்கு
உள்ளாக்கியுள்ளது. அண்ணமலை இல்லையென்றால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் கதை முடிந்துவிடும்.
எங்களுக்கு அண்ணாமலை கண்டிப்பாக வேண்டும் என்று ஆதரவாளர்கள் பலரும் முழங்கிவருகிறார்கள்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டி போராட்டம் நடத்துகிறார்கள்.
தமிழகத்தின் புதிய பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட
வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன்
ஆகியோரும் கடுமையாகப் போராடி வருகிறார்கள். எப்படியாவது மீண்டும் ஒரு மூன்று வருடம்
தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்க வேண்டும் என்பது அண்ணாமலைக்கு பெரும் ஆர்வமாக இருக்கிறது.
எனவே, வார் ரூம் அட்டாக் இப்போது ஆரம்பமாகியுள்ளது. மோடி, அமித்
ஷாவுக்கும் எச்சரிக்கை விடுகிறார்கள். கட்சித் தலைவர் பதவியில் இருந்து தூக்கினால்
உடனடியாக அவரை மத்திய அமைச்சராக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அண்ணாமலை தனிக்கட்சி
தொடங்கி முதல்வர் ஆகிவிடுவார் என்றும் எச்சரிக்கை செய்கிறார்கள். இதற்கெல்லாம் அசைந்துகொடுக்குமா
டெல்லி என்பது விரைவில் தெரிந்துவிடும்.