Share via:

சமீபத்தில் டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை, ‘’அதிமுக கூட்டணி
குறித்து நான் பேச விரும்பவில்லை. என்னை பொறுத்தவரை அமித்ஷாவின் கருத்தை, இறுதி கருத்தாக
பார்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தலைவர் மீதோ, கட்சியின் மீதோ கோபம் கிடையாது. நான்
யாருக்கும் எதிரானவனும் கிடையாது. பாஜ மற்றும் தமிழக நலன் ஆகியவைதான் எனக்கு முக்கியம்.
நான் தொண்டனாக பணியாற்ற தயார் என்று டெல்லியில் சொல்லி இருக்கிறேன்’’ என்பதையே திரும்பத்
திரும்ப அழுத்தமாகச் சொன்னார்.
இதையடுத்து பா.ஜ.க.வில் இருக்கும் அண்ணாமலை ஆதரவாளர்கள் அலறிக்கொண்டு
இருக்கிறார்கள். பா.ஜ.க.வை வளர வைப்பதற்கு டெல்லி தரும் பரிசு இதுதானா..? தனிக் கட்சி
தொடங்கி ஆட்சியைப் பிடிப்போம் என்று அண்ணாமலையை சூடேற்றுகிறார்கள். இந்த நிலையில் அண்ணாமலை
ஆதரவாளர்கள் சென்னையில் சந்தித்து ரகசிய ஆலோசனை மேற்கொள்வதாகத் தெரியவந்துள்ளது.
விமான நிலையத்தில் பேசிய அண்ணாமலை, ‘’எங்கள் கட்சியின் தலைவர்கள்
சரியான முடிவு எடுப்பார்கள். அவர்களிடம் சொல்ல வேண்டியதை நான் சொல்லி வந்திருக்கிறேன்.
அரசியலில் என்ன நடக்கவேண்டுமோ அது சரியான நேரத்தில் நடக்கும். என்னால் யாருக்கும் எந்த
பிரச்னையும் இருக்காது. நான் மாறி மாறி பேசுபவன் கிடையாது. என்னுடைய நிலைப்பாட்டில்
எந்த மாற்றமும் இல்லை. பாதுகாப்பு கொடுப்பதில் விருப்பு வெறுப்பு பார்ப்பதில்லை. விஜய்
என்றாலும் சரி, செங்கோட்டையன் என்றாலும் சரி எல்லார்க்கும் ஒன்றுதான்.
எங்களுக்கும் விஜய்க்கும், செங்கோட்டைனுக்கும் எந்த உறவும் கிடையாது.
மரியாதைக்குரிய எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர். அவர் அவருடைய
கட்சி தொண்டர்களால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அதிமுகவில் இருக்கும் பிரச்னைக்குள்
செல்ல விரும்பவில்லை. பாஜ எதற்கு இன்னொரு கட்சியில் தலையிட வேண்டும்? பாஜ இன்னொரு கட்சியை
அழித்து வளரும் என்றால், பாஜவும் அழிந்துவிடும் என்றுதான் சொல்லி வருகின்றேன். பாஜ
எந்த கட்சியையும் அழித்து வளராது. அதிமுகவில் இருக்கும் கோர்ட் வழக்குகள் அவர்களுடைய
பிரச்னை. இதில் எங்களுக்கு எந்த பாத்திரமும் இல்லை…
இரண்டு வாரம் கழித்து எங்கு இருப்பேன், தனி நபராக என்ன செய்வேன்
என்பது எனக்கு தெரியாது. ஐபிஎஸ் ரேங்கில் என்னுடைய ரேங்க் 2. சொந்தமாக நின்று நிலைத்து
பேசுபவன் நான். எனக்கு கொஞ்சம் வாய் பேச்சு, குறும்பு அதிகம். தன்மானம் கொஞ்சம் அதிகம்.
வைராக்கியம் அதிகம். நான் இங்கு பவருக்காக வரவில்லை. கூட்டணி குறித்து தலைமை முடிவு
எடுக்கும்” என்றார்.
இதையடுத்து அண்ணாமலை மாற்றப்படுவது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது.
ஆகவே, கட்சியில் மற்றவர்களுக்குக் கீழ் அண்ணாமலை பணியாற்றுவாரா அல்லது தனிக் கட்சி
தொடங்கும் அளவுக்குச் செல்வாரா என்று அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம். ‘’அ.தி.மு.க.
கூட்டணிக்கு டெல்லி விரும்புகிறது என்பது உண்மை. ஆனால், எடப்பாடி இல்லாத அண்ணா தி.மு.க.
என்பது தான் அண்ணாமலையின் விருப்பம். அவரது விருப்பத்தைத் தாண்டி எதுவும் டெல்லி செய்யாது
என்று நம்புகிறோம். அண்ணாமலையால் வேறு ஒருவருக்குக் கீழ் அடிமையாக இருக்க முடியாது.
ஆகவே, அப்படியொரு சூழலில் என்ன செய்வது என்று ஆலோசித்து வருகிறோம். விரைவில் தகவல்
தருகிறோம்’’ என்கிறார்கள்.