Share via:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழகம் முழுக்க பற்றி எரிந்துகொண்டு
இருக்கிறது. இந்த நிலையில் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளும் சுற்றிவருகின்றன. அப்படி
பொய் செய்தி பரப்பிய அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா என்பது கேள்வியாக இருக்கிறது.
நேற்று அண்ணாமலை, ‘’கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக
இருந்தவர் தமோகன்ராஜ். அவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்றதிலிருந்தே,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனையைக்
கட்டுப்படுத்துவதில் உறுதியாக இருந்தார். அவரது பதவிக் காலத்தில், பல இடங்களில் கள்ளச்சாராயம்
காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர்.
ஒரே நாளில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணி செய்து வந்த
25 காவலர்களை இடமாற்றம் செய்தார். கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் இத்தனை தீவிரமாக இருந்த
மோகன்ராஜ் அவர்கள், பணி ஓய்வுக்கு எட்டு மாதங்கள் இருக்கும்போதே, விருப்ப ஓய்வு கேட்டு,
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் அவர் விருப்ப
ஓய்வில் செல்கிறார் என்ற குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. மோகன்ராஜ் அரசியல் அழுத்தம்
காரணமாகத்தான் விருப்ப ஓய்வு பெற்றார் என்பதை தற்போதைய கள்ளச்சாராய மரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.’’
என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த செய்தியில் குறிப்படப்படும் மோகன்ராஜ், ‘’தன்னுடைய
மகள் பிரசவத்திற்கு உதவி செய்வதற்காக மனைவியுடன் அமெரிக்கா செல்லவேண்டிய காரணம் இருந்ததாலே
விருப்ப ஓய்வு பெற்றேன். கள்ளக்குறிச்சியில் எனக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை’’
என்று கூறியிருக்கிறார்.
கள்ளச்சாராய தீ பற்றி எரியும்போது முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும்
அரசியல்வாதியுமான அண்ணாமலை, இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் செய்தியாகச் சொல்லலாமா..?
தவறு நடந்துவிட்டது என்றால், அதை ஒப்புக்கொள்வாரா என்று கேள்வி எழுந்திருக்கிறது.
அண்ணாமலை ஆதரவாளர்களோ, ‘அரசு மோகன்ராஜுக்கு நெருக்கடி கொடுத்து
இப்படி பேச வைத்திருக்கிறது’ என்று சொல்கிறார்கள். தமிழக மக்கள் நிலையே பரிதாபம்.