Share via:
எம்.ஜி.ஆர். முதல்வராக
இருந்த நேரத்தில் தன்னுடைய தொண்டர்கள் அனைவரும் கையில் இரட்டை இலையை பச்சை குத்திக்கொள்ள
வேண்டும் என்று கூறினார். அதாவது கட்சி மாறுவதைத் தடுப்பதற்காக இப்படி உத்தரவு போட்டார்.
உடனே நிறைய பேர் எந்த யோசனையும் இல்லாமல் எம்.ஜி.ஆர். உருவத்தையும் சேர்த்து பச்சை
குத்தினார்கள். இது மோசமான அடிமைத்தனம் என்று கடுமையான விமர்சனம் எழுந்த பிறகே எம்.ஜி.ஆர்.
அந்த யோசனையைக் கைவிட்டார்.
இப்போது விஜய் சொன்னாரோ
இல்லையோ தாடி பாலாஜி அவரது உடலில் விஜய் உருவத்தைப் பச்சை குத்தியிருக்கிறார். தி.மு.க.
ஆதரவாளராக இருந்த தாடி பாலாஜி விஜய் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகத் தெரிவித்ததும் வெளிப்படையாகவே
ஆதரவு தெரிவித்து வந்தார். கட்சியில் பதவி கிடைக்குமா என்று பார்த்தார்.
ஆனால், விஜய் எதுவும்
கொடுக்கவில்லை என்றதும், தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை பச்சை குத்திக்கொண்டார்.
கிட்டத்தட்ட 7 மணி நேரம் பொறுமையாக அமர்ந்து விஜய்யின் முகத்தை தனது நெஞ்சில் டாட்டூவாக
பதித்துவிட்டார். இது குறித்து பேசும் தாடி பாலாஜி, ‘’நான் பச்சை குத்திய செய்தி ஒரு
வேளை விஜய்க்கு தெரிய வந்தால் நிச்சயமாக என்னை நேரில் அழைப்பார். அவரோடு நிற்கும்போது
நான் பச்சை குத்திய வலி எனக்கு மறந்துபோகும்” என்று தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இப்போது கட்சிப்
பதவியில் இல்லாத தாடி பாலாஜியே அவரது விசுவாசத்தைக் காட்டுவதற்காக இப்படி பச்சை குத்தியிருக்கிறார்.
அவரது உண்மை விசுவாசி என்று தன்னைப் பற்றி பெருமையாகப் பேசிக்கொள்ளும் புஸ்ஸி ஆனந்த்
இன்னமும் டாட்டூ குத்தாமல் இருப்பது சரியா..? தாடி பாலாஜியை விட பெரிய சைஸில் விஜய்
படத்தை புஸ்ஸி ஆனந்த் குத்திக்கொள்ள வேண்டும் என்று தூண்டி வருகிறார்கள்.
இந்த வரிசையில் அனைத்து
நிர்வாகிகளையும் பச்சை குத்திக்கொள்ளும்படி விஜய் கட்டளை இடுவாரா என்று பயந்து கிடக்கிறார்கள்.