Share via:
தேர்தலுக்கு முன்பாகவே தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியை உடைத்து விஜய் கட்சியில் கொண்டுபோய் சேர்ப்பதற்கு கடுமையாக உழைத்த
ஆதவ் அர்ஜூனா இப்போது விஜய் கட்சியில் சேர்ந்து தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர்
பதவி பெற்றிருக்கிறார். இந்த பதவி வாங்கியதுடன் நேரடியாக திருமாவளவனை சந்தித்து ஆசி
பெற்றதும் அவரை திருமாவளவன் வாழ்த்து பெற்றதும் அரசியல் நாடகம் என்றே கருதப்படுகிறது.
விஜய் கட்சியில் சேர்ந்தவுடன் நேரடியாக திருமாவளவனை சந்தித்த காரணம்
தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே என்று உடன்பிறப்புகள் கோபப்படுகிறார்கள்.
திருமாவளவனுடைய ஸ்லீப்பர்செல்லாகவே ஆதவ் அர்ஜூனா விஜய் கட்சிக்குப் போயிருக்கிறார்.
தகுந்த நேரத்தில் விடுதலை சிறுத்தைகளை அங்கு கொண்டுபோய் சேர்ப்பது தான் ஆதவ் அர்ஜூனுடைய
ஒரே அசைன்மென்ட் என்கிறார்கள்.
இது குறித்துப் பேசும் தி.மு.க.வினர், ‘’ஒவ்வொரு தேர்தலிலும் முந்தைய
தேர்தலில் வாங்கிய சீட்களை விட அதிகம் வாங்குவதற்கு கூட்டணிக் கட்சிகள் பேரம் பேசுவது
உண்டு. அதன்படி இந்த முறை திருமாவளவன் அதிக சீட் கேட்பது, விரும்பும் தொகுதிளை கேட்பது,
வெற்றிபெற்றால் அமைச்சரவையில் இடம் கேட்பது போன்ற நெருக்கடிகளை அதிகம் செய்வார்.
அவரது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் வேறு அணிக்குத் தாவுவார்.
திமுக ஆட்சியில் ஆம்ஸ்ட்ராங், வேங்கைவயல் உள்ளிட்ட விஷயங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள்
திருப்தியில்லை என திருமா பேசி வருவது, ஆதவ் தவெகவில் சேர்வது, அவரை அழைத்து திருமா
வாழ்த்துவது போன்ற நிகழ்வுகள் கூட்டணி மாறுவதற்கான சிக்னல்கள் என்பதில் ஐயமில்லை…’’
என்கிறார்கள்.
அதேநேரம் விஜய் கட்சி நிர்வாகிகள், ‘’கட்சிக்குள் நுழைந்ததும்
பெரிய பதவி கொடுக்கப்பட்டிருப்பது சரியில்லை. விஜய்க்கு ஆதவ் அர்ஜூனா எத்தனை தூரம்
நம்பிக்கையாகவும் உண்மையாகவும் இருப்பார் என்பது யாருக்கும் தெரியாது. ஏனென்றால் அவர்
கடந்துவந்த பாதை அப்படி. இன்னமும் தி.மு.க.வினரிடமும் திருமாவளவனிடமும் நட்பு பாராட்டி
வருகிறார். ஒரு வேளை விஜய் கட்சியுடன் திருமாவளவன் கூட்டணி வைக்கவில்லை என்றால் ஆதவ்
அர்ஜூனா யாருக்கு விசுவாசமாக இருப்பார் என்ற கேள்வி வரும். விஜய் கட்சியில் நடக்கும்
அத்தனை தகவல்களையும் தி.மு.க.வுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தரப்போகும்
ஸ்லீப்பர் செல்லாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் விஜய் கட்சி டெபாசிட் வாங்க
முடியாத அளவுக்கு சிக்கலை சந்திக்க நேரிடலாம்’’ என்று அஞ்சுகிறார்கள்.
விஜய் கட்சியினரே அஞ்சுகிறார்கள் என்றால் கொஞ்சம் சிக்கல் தான்.