Share via:
அரசியலில் இறங்குவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தை உருவாக்கியிருக்கும்
நடிகர் விஜய் முதன்முதலாக இரண்டு வரியில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அது தமிழகம்
முழுக்கவே சலசலப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த அறிக்கையில், ‘சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும்
வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை
திருத்தச் சட்டம் 2019 போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ் நாடில் இந்த
சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என்று
கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த அறிக்கையில் சட்டம் கொண்டுவந்த பா.ஜ.க. பற்றியும் பாரதப்
பிரதமர் மோடி பற்றியும் குறிப்பிடுவதற்கு தைரியம் இல்லாமல், அந்த அரசை கண்டிக்காமல்
நேரடியாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதை தி.மு.க.வினர் கடுமையாக எதிர்த்து
வருகிறார்கள். மோடியின் பெயர் சொல்லி அல்லது பா.ஜ.க.வின் பெயரைச் சொல்லி கண்டிப்பதற்கு
விஜய் ஏன் பயப்படுகிறார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ. வடிவில் எந்த சட்டமும் அமல் ஆகாது என ஆட்சிக்கு
வந்தவுடன் சட்டசபை தீர்மானம் போட்ட இந்தியாவில் முதல் மாநில அரசு திராவிடமாடல் அரசுதான்,
இது தெரியாமல் அறிக்கை விட வேண்டாம் என்று பதிலடி கொடுக்கிறார்கள்.
அதேநேரம், விஜய் ரசிகர்களோ, ‘ஒரே ஒரு அறிக்கை வெளியிட்டார் தலைவரு…
நாடு முழுக்க அதை பத்தித்தான் பேசிக்கிட்டு இருக்காங்க… 2026ல் தலைவர் ஆட்சிதான்’ என்று
கும்மாளம் போடுகிறார்கள்.