Share via:
மக்களால் தேர்வு
செய்யப்பட்ட தி.மு.க. ஆட்சியை மன்னராட்சி என்றும் பிறப்பால் ஒருவரை முதல் அமைச்சர்
ஆக்க முடியாது என்று நேரடியாக ஸ்டாலின், உதயநிதியை குறி வைத்துப் பேசியிருக்கிறார்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா. ஆகவே, இதற்கு மேலும்
ஆதவ் அர்ஜூனாவை துணைப் பொதுச்செயலாளராகவே வைத்துக்கொண்டு, எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,
திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறது என்றும் 2026 தேர்தலிலும் திமுகவுடன் தான் கூட்டணி
என்றும் திருமாவளவன் கூறுவதை முடியாது என்று தி.மு.க.வினர் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
மேலும் தி,.மு.க.வினர்,
‘’ விசிகவின் நிறுவனத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவனை முற்றிலுமாக சிறுமைப்படுத்தும்
செயலை விஜய்யும் ஆதவ் அர்ஜுனாவும் செய்திருக்கிறார்கள். அதிலும் விஜய் திருமா குறித்துப்
பேசியது முதிர்ச்சியின்மையின் உச்சம். அதை வைத்து ஊடகங்கள் விவாதிப்பதும், மற்றவர்கள்
திருமாவளவனை கேள்விக்கு உள்ளாக்குவதும் அபத்தம்.
அந்த கட்சியில் இருக்கின்ற
நிர்வாகிகளுக்கே அறிமுகமில்லாத ஒருவரை, அவர்கள் மதிக்காத ஒருவரை மையமாக வைத்து நடத்தப்படும்
இந்த அரசியல் நாடகம் கேவலமாக இருக்கிறது. லாட்டரி மூலம் பொதுமக்களை சுரண்டிக் கொழுத்த
குடும்பத்திலிருந்து வந்த ஒருவரை தங்கள் கட்சியில் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் பதவி
தந்தமைக்கான விலையை இன்று விசிக தந்திருக்கிறது.
ஸ்டாலின் கலந்துக்கொள்ள
மறுக்கும் ஒரு விழாவில் வேறு நிர்வாகிகள் கலந்துகொள்வார்களா? அப்படி கலந்துக்கொண்டால்
அந்தந்த கட்சித் தொண்டர்கள் தான் அவர்களை மதிப்பார்களா? உடனே திருமா நடவடிக்கை எடுக்க
வேண்டும்’’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
புத்தக விழா பேச்சுக்கு
விளக்கம் கேட்டிருக்கிறோம் என்று திருமாவளவன் நழுவுவது ஏன், நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறாரா
என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் கேட்டதற்கு, ‘’இதுவரை கட்சிக்கு 100 கோடி
ரூபாய் வரை செலவழித்திருப்பதாகக் கணக்கு காட்டுகிறார் ஆதவ். மேலும் எம்.பி. சீட் வாங்கித்தருவதாகச்
சொல்லி தனியே பணம் வாங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த பணத்தைக் கொடுத்தால் மட்டுமே
அவரை வெளியே அனுப்பமுடியும் என்பதாலே திருமாவளவன் அமைதி காக்கிறார். அவராக வெளியேறட்டும்
என்று காத்திருக்கிறார்’’ என்கிறார்கள்.
இந்த நிலையிலும்
திருமாவளவன், ‘’ஆதவ் அர்ஜுனா பேசியது தவறான கருத்து. உயர்நிலைக் குழு நோட்டீஸ் அனுப்பி
நடவடிக்கை எடுக்கும்’’ என்று கடந்து செல்கிறார் என்றால், அவரது நிலைமை பரிதாபத்திலும்
பரிதாபமே.