அதானியின் 2000 கோடி ரூபாய் ஊழல் காரணமாக உலகம் முழுக்க இந்தியாவின் பேர் நாறிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த ஊழல் எல்லாமே எதிர்க்கட்சி ஆளும் மாநில ஊழல் என்று பா.ஜ.க. நைசாக நழுவுகிறது. தி.மு.க.வினர் கடந்த 3 ஆண்டாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்கிறார்கள். அப்படியென்றால் அதானியை ஸ்டாலின் சந்தித்தது எதற்காக என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து தி.மு.க.வினர், ‘’உதய் மின் திட்டத்தில் சேர்ந்தது அதிமுக அதன் நீட்சியாக ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியை பயன்படுத்த வேண்டும்.., தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விதியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் சூரிய ஒளி மினசாரத்தை வாங்க வேண்டியுள்ளது.

அப்படி வாங்காதபட்சத்தில் பல்வேறு விதமான அழுத்தங்களை மாநில அரசுகளுக்கு உருவாக்குகிறது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு அதானி நிறுவனத்துடன் எந்த ஒரு ஒப்பந்தமும் புதியதாக போடவில்லை.. அப்படி திமுக அரசு போட்ட ஒப்பந்தத்தைப் பற்றி உங்களிடம் ஆதாரம் இருந்தால் சமர்ப்பியுங்கள்’’ என்கிறாகள்.

இந்த விவகாரத்தில் டாக்டர் ராமதாஸ், ‘’அதானி வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில்,’’ ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில்  இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒதிஷா, ஜம்மு – காஷ்மீர், தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து  உற்பத்தியுடன் இணைந்த  திட்டத்தின்படி  சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை (Power Sale Agreement PSA) செய்து கொண்டிருக்கின்றன.

இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்திற்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு  ரூ.1750 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய  நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, கையூட்டு வழங்கப் பட்டதாக அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால கட்டத்தில் தான், அதாவது 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் நாள் அதானி குழுமத்தால் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கான ஒப்பந்ததில் தமிழ்நாடு மின்சார வாரியமும், இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகமும் கையெழுத்திட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது  இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி  ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன? அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து  தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்…’’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link