Share via:
எடப்பாடி பழனிசாமியுடன் ஒருங்கிணைப்புக் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது,
எந்த நேரமும் இணைப்பு நடக்கலாம் என்று சமீபத்தில் சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.
அதேபோல், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக 6 பேர் மட்டுமே இருந்த நிலையில்
இப்போது 12 பேர் எதிர்ப்பு என்றும் செய்திகள் வெளியாகின. இப்படி வெளியான செய்திகள்
எல்லாவற்றுக்கும் முகப்பேரில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா கூட்டத்தில் எடப்பாடி
காட்டமான பதிலடி கொடுத்திருக்கிறார். இத்தனை கோபமாக எடப்பாடி பழனிசாமி பேசியதற்குக்
காரணம் யார் என்று தெரியவந்துள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’அதிமுகவில் இணைப்பு
நடவடிக்கைகள் நடப்பதாக செய்தி வெளியிடுகின்றனர். அதிமுக பொதுக்குழு முடிவின் படியே
ஓபிஎஸ் உள்ளிட்டோர் நீக்கப்பட்டார்கள். நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான்.
அவர்களை இணைப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை. பொதுக்குழு முடிவே இறுதியானது.
அதேபோன்று எடப்பாடி பழனிசாமிக்கு 6 பேர் எதிர்ப்புன்னு செய்தி
போட்டாங்க. இப்போ 12 பேர் எதிர்ப்பு என்று செய்தி போடுகிறார்கள். உண்மையில் அ.தி.மு.க.வில்
ஒருவர் கூட எனக்கு எதிர்ப்பு இல்லை, ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கிறது எங்கள் கட்சி.
என்னுடைய தலைமைக்கு எதிர்ப்பு இருக்கிறது என உங்களால் நிரூபிக்க இயலுமா?
தினமலர் பத்திரிகை நல்ல பத்திரிகை. பொறுப்பாக செயல்பட்டு வந்தது.
ஆனால், இப்போது ஊடக தர்மத்தை மறந்து விட்டார்கள். பொய்யான செய்திகளை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள
வேண்டும்..’’ என்று கூறியிருக்கிறார். அதோடு, ‘’விடியா திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்று
40மாதம் ஆகி விட்டது,நீட் தேர்வு ரத்து ரகசியம் என்னாச்சு? நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு
ரத்து விவகாரத்திற்கு குரல் கொடுத்தீர்களா? 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று என்ன பயன்?’’
என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த விஷயத்துக்கு மீண்டும் ஆவேசம்
அடைந்தது ஏனென்று விசாரிக்கையில், அண்ணாமலை தூண்டுதல் பேரிலே தினமலர் நாளிதழில் செய்திகள்
வெளியாகும் தகவல் எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்திருக்கிறது. அதனாலே கடுமையான எதிர்ப்பை
அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் என்கிறார்கள்.
அதேநேரம், ஒருங்கிணைப்புக்குழுவினர், இவருக்கு ’’எடப்பாடி பழனிசாமிக்கு
வலுவான எதிர்க்கட்சி அரசியலையும் முன்னெடுக்க தெரியவில்லை, கட்சியையும் ஒருங்கிணைத்து
அரவணைத்து வழிநடத்த தெரியவில்லை. எனவே மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓய மாட்டார்’’
என்று குரல் எழுப்புகிறார்கள்.