News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அமித்ஷாவை சந்தித்துவிட்டு தனி காரில் வந்த எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு வந்ததாக இரண்டு நாட்களாக ஊடகங்களில் எக்கச்சக்க செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்திற்கு இன்று எடப்பாடி விளக்கம் அளித்திருக்கிறார்.

நான் முகத்தை மறைத்ததாக முதல்வர் சொல்கிறார். முகத்தை மறைக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இதே ஸ்டாலின் நான் பெரும்பான்மையை நிரூபித்தபோது சட்டையை கிழித்துக்கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அது மக்களுக்கு நன்றாகத் தெரியும். யார் சட்டையை கிழித்துக்கொண்டு வருவார்கள்? மனநிலை பாதித்தவர்கள்தான் சட்டையைக் கிழிப்பார்கள். அந்த நிலையில் வந்தவர் இன்று என்னைப்பற்றி பேசுகிறார்.

அதிமுகவில் நான் தும்மினாலும் இருமினாலும் விவாத நிகழ்ச்சி நடத்துகிறீர்கள். கடந்த 8 ஆண்டுகளாக என்னைப் பற்றியே நீங்கள் விவாதம் நடத்துவதுடன்,  செய்தியும் போடுகிறீர்கள். ஆளும் கட்சியாக இருக்கும்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் என்னைப்பற்றியே பேசுகிறீர்கள். இதற்கு நன்றி. ஆனால், நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்னைகளை நீங்கள் கவனிக்க வேண்டும்.

வறுமையை மையமாக வைத்து கிட்னி திருடப்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மருத்துவமனையில் இது நடந்துள்ளது. இந்த முறைகேடுக்கு பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. இது எவ்வளவு பெரிய மோசடி. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்மணியின் வறுமையைப் பயன்படுத்தி அவரது கல்லீரலை எடுத்துள்ளார்கள். எதற்கெல்லாமோ வழக்கு போடும் அரசு, இதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

நான் டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சரை சந்தித்து தேசத்துக்கு உழைத்தவருக்கு மரியாதை செலுத்த பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை கடிதம் கொடுத்தோம்.

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு உள்துறை அமைச்சர், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டேன் என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார். அப்படி பேசிய பிறகும் இந்த விஷயத்தில் அரைத்த மாவையே அரைக்க வேண்டாம். உள்துறை அமைச்சர் என் எழுச்சி பயணத்தைப் பற்றி பாராட்டிப் பேசியதுடன் அது குறித்து விவரங்களைக் கேட்டு அறிந்துகொண்டார்.  

அண்மைக்காலமாக கட்சி கட்டுப்பாட்டை மீறி சிலர் செயல்படுகிறார்கள். அம்மா காலத்தில் இருந்து, கட்சிக் கட்டுப்பாட்டை யார் மீறினாலும் தலைமை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். அதன்படிதான் சிலர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கு கண், காது, மூக்கு வைத்து செய்தி வெளியிடுகிறீர்கள்.

உள்துறை அமைச்சர் அதிமுக விஷயங்களில் தலையிட மாட்டேன் என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார். அதன் பிறகு டிடிவி, ‘நான் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கிறேன்என்று சொன்னார். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு சம்மதிப்போம் என்றார். ஆனால் அண்மையில் என் மீது சில குற்றச்சட்டுகளை சொல்லி வருகிறார். நேற்றைய தினம் நான் முகமூடி அணிந்து சென்றதாகச் சொல்லியிருக்கிறார்.

நான் முகமூடி அணிந்து போகவில்லை. அவர்தான் முகமூடி அணிந்து அதிமுகவில் இணைந்தார். அம்மா டிடிவியை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார். அவர் 10 ஆண்டுகள் கட்சியிலே இல்லை. அம்மா இறக்கும் வரை அவர் சென்னை பக்கமே வரவில்லை. அவர் என்னைப் பற்றி பேசுகிறார் என்று கூறியிருக்கிறார்.

இதை அமித்ஷா சந்திப்பில் பேசியிருந்தால் இந்த சர்ச்சைக்கே இடம் இல்லையே. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link