Share via:
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு சிக்கல் தரும் வகையில் இரண்டு மிகப்பெரும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை அடுத்து ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடைபெற்றுள்ளது. இந்த இரண்டுமே பட்டியலின மக்கள் தொடர்புடையதாக இருப்பதும், அனைத்து எதிர்க்கட்சிகளும் தி.மு.க.வுக்கு எதிராக ஒன்று திரண்டிருப்பதும், அரசியல் கோணத்திலும் சிந்திக்க வைக்கிறது.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா உதயசூரியன் சின்னத்திலும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி மாம்பழம் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா மைக் சின்னத்திலும் நிற்கிறார்கள். வரும் 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், உச்சகட்ட பரப்புரை நடந்துகொண்டு இருக்கிறது.
ஆளும் தி.மு.க.வுக்கும் பா.மக.வுக்கும் இடையில் நடக்கும் கடுமையான போட்டி என்று சொல்லப்பட்டு வந்தாலும், நாம் தமிழர் கட்சியினரும் இரண்டாவது இடத்தைப் பிடிக்க போராடும் வகையில் இதுவரை இல்லாத அளவுக்கு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதேநேரம், விக்கிரவாண்டியில் தெருவுக்குத் தெரு தி.மு.க.வினர் தலை மட்டுமே தென்படுகிறது. கிட்டத்தட்ட 10 அமைச்சர்கள் பம்பரமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ஜெகத்ரட்சகன், பொன்முடி ஆகியோர் தங்கள் செல்வாக்கை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
குறிப்பிட்ட ஏரியாக்களில் மட்டும் பா.ம.க.வினர் இருக்கிறார்கள். சீமான் ஆட்கள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. மாலை நேரத்தில் மட்டும் வந்து பார்ட் டைம் பிரசாரம் செய்கிறார்கள்.
விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தம் 2,37,031வாக்காளர்கள் உள்ளனர். இங்குஇ வன்னியர்கள் 35 சதவீதத்திற்கு மேல் இருக்கும் தைரியத்தினால் தான் பா.ம.க. மல்லுக்கட்டுட்கிறது. இந்த வாக்குவங்கியை குறைப்பதற்கு வன்னியர் இனத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் கடுமையாக பிரசாரம் செய்கிறார்கள், ஆசை வார்த்தை காட்டுகிறார்கள். எனவே, ஒட்டுமொத்தமாக இந்த வாக்கு பா.ம.க.வுக்குச் செல்வதற்கு வாய்ப்பே இல்லை.
பா.ம.க.வினர் செளமியாவும் சங்கமித்ராவும் மக்களிடம் சிரித்துப் பேசினால் ஓட்டு விழுந்துவிடும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அதேநேரம், ஒரு ரூபாய் கூட பணம் செலவழிப்பதற்கு பா.ம.க. தயாராக இல்லை. இவர்களுக்காக பா.ஜ.க.வும் பணம் கொடுக்கப்போவதில்லை.
தொகுதியில் வன்னியர்களுக்கு சமமாக கிட்டத்தட்ட 30 சதவீதத்திற்கு மேல் பட்டியலின மக்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய வாக்கு தி.மு.க. கூட்டணிக்குச் செல்வதற்கே அதிக வாய்ப்புகள் தென்படுகிறது. இவர்களை அடுத்து இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் கிட்டத்தட்ட 10 சதவீதம் இருக்கிறார்கள். இவர்களுடைய வாக்கு அப்படியே தி.மு.க. கூட்டணிக்கே செல்கிறது.
இவர்களைத் தவிர உடையார்கள் கணிசமான அளவிலும் முதலியார், கோனார் அடுத்தடுத்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். ஆகவே வன்னியர் ஓட்டுகளை மட்டும் நம்பி பா.ம.க. இங்கு நிற்பது நிச்சயம் பலன் தரப்போவதில்லை.
சமீபத்தில் விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் சார்பாகப் போட்டியிட்ட ரவிக்குமார் விக்கிரவாண்டியில் மட்டும் 72,188 வாக்குகள் பெற்றுள்ளார். அதே போல் அ.தி.மு.க. வேட்பாளர் 65 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். இங்கு பா.ம.க. வேட்பாளர் 32 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். நா.த.க. வேட்பாளர் மு.களஞ்சியம் வெறும் 8 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
இப்போது பா.ம.க. வேட்பாளர் இந்த 32 ஆயிரம் வாக்குகள் வாங்குவது தான் எளிதான இலக்காக இருக்கும். இதை தாண்டி வாக்குகள் வாங்குவது நிச்சயம் கடினம்.
அ.தி.மு.க.வினர் ஓட்டு பா.ம.க.வுக்கு விழுவதற்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையையும் அண்ணாமலை சமீபத்தில் போட்டு உடைத்துவிட்டார். அதேநேரம், பணம் கொடுக்கும் ஆட்களுக்கு வாக்களிக்கும் மக்கள் இருப்பதால் அ.தி.மு.க.வினரின் கணிசமான வாக்குகள் தி.மு.க.வுக்கு வந்து சேரும்.
அதேபோல் புதிய தலைமுறையினர் வாக்குகள் நாம் தமிழர் அபிநயாவுக்குச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடந்த தேர்தலில் தர்மபுரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராகக் களம் இறங்கிய அபிநயா 65 ஆயிரம் வாக்குகளைப் பெற்றவர். இப்போது அவர் சொந்த தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்கிறார். இவரும் வன்னியர் சமூகம் என்பதால், அந்த சமூக வாக்குகளும் அபிநயாவுக்குக் கொஞ்சம் விழுகிறது.
அன்புமணி ஜெயலலிதா படத்தைப் போட்டு வாக்கு கேட்டதும், அண்ணாமலை மிகவும் கேவலமாக எடப்பாடி பழனிசாமியை பேசுவதும் நிச்சயம் இந்த தேர்தலில் எதிரொலிக்கும். ஆகவே, பா.மக.வுக்கு எதிராக வாக்களிக்கும் மனநிலையில் அ.தி.மு.க பிரமுகர்கள் இருக்கிறார்கள்.
இங்கு பா.ஜ.க., பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருக்கு பத்து வாக்குகள் கிடைப்பதே கடினம். ஆகவே, இன்றைய நிலையில் தி.மு.க. அமோக வெற்றி பெறுகிறது. பா.ம.க. வேட்பாளர் டெபாசிட் வாங்கினால் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயமும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையும் இந்த தேர்தலில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை. எனவே, தி.மு.க. வெற்றி அடைந்ததும், ஜனநாயகப் படுகொலையினால் தோற்றுப் போனோம் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கை விடப்போவது நிச்சயம். தி.மு.க.வுக்கு வெற்றி உறுதியாகிறது.

