Share via:
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு கே.எஸ்.அழகிரிக்கு
அடுத்து யார் என்று நிறைய பேர் போட்டி போட்டார்கள். சீனியர்களுக்கு பதவி இல்லை என்று
ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டுவிட்டது. மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, செல்லக்குமார், கார்த்தி
சிதம்பரம், விஜயதாரணி ஆகியோர் முட்டி மோதினாலும், செல்வப்பெருந்தகைக்கு அந்த அதிர்ஷ்டம்
கிடைத்திருக்கிறது.
ராகுல் காந்தி இப்போது பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர், விவசாயிகள்,
பாட்டாளிகள், இன-மத-மொழி சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதியின் மீது நம்பிக்கையும்
அக்கறையும் கொண்டவர்களுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆகவே,
பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வப்பெருந்தகைக்கு இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகச்
சொல்கிறார்கள்.
இப்போது பதவியை மட்டுமே குறியாக வைத்து இயங்கும் ஒருசிலரை கட்சியில்
இருந்து வெளியே அனுப்பினால் மட்டுமே காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைய முடியும் என்று
கட்சியினரே கருதுகிறார்கள். அந்த வகையில் இரண்டு பேர் இப்போது செல்வப்பெருந்தகை பட்டியலில்
இருக்கிறார்கள்.
முதல் நபர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். கையில்
செல்போன் வைத்துக்கொண்டு அவ்வப்போது ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியையும் அவமானப்படுத்தி
வருகிறார். ஆகவே, அவருக்கு சீட் கொடுத்துவிடக் கூடாது என்று அத்தனை காங்கிரஸ்காரர்களும்
தி.மு.க.வினரும் உறுதியோடு இருக்கிறார்கள். ஆகவே, கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
அடுத்தவர், விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியில் உழைப்பவர்களுக்கு
மரியாதை இல்லை. காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவராக ராஜேஷ் குமார் எம்எல்ஏவை நியமனம்
செய்யப்படும்போது எம்எல்ஏக்களிடம் ஆலோசனை மேற்கொள்ளவில்லை. எனவே, பாஜகவில் இணைவது குறித்து
விரைவில் அறிவிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
இவர் பா.ஜ.க.வில் இணைந்தால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் என்பதால்
இவராக கட்சி மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. அதேபோல், கார்த்தி சிதம்பரமும் கடைசி வரையிலும்
சீட்டுக்காக போராடுவாரே தவிர கட்சி மாற மாட்டார்.
இவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து கழுத்தைப் பிடித்து தள்ளும்
வகையில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பது தான் கட்சியினர் கருத்தாக இருக்கிறது. செல்வப்பெருந்தகை
கண்டிப்பாக அதனை செய்தால் மட்டுமே மக்களிடம் கட்சிக்கும் நல்ல பெயர் இருக்கும்.
செய்வாரா செல்வப்பெருந்தகை..?