News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

முரசொலி செல்வம் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் தி.மு.க.வின் பரம விரோதியான அண்ணாமலை தொடங்கி சீமான் வரையிலும் அஞ்சலி பதிவு போடுகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் நேரடியாகவே போய்விட்டார். கட்சி தொடங்காத விஜய்யின் மனைவி சங்கீதா நேரடியாகச் செல்கிறார். அரசியல், சினிமா எதிலும் முகம் காட்டாமல் இத்தனை பேரை இழுத்திருக்கும் முரசொலி செல்வம் யார்.?

முரசொலி செல்வம். மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கலைஞரின் மருமகன். முரசொலி மாறனின் இளைய சகோதரர். மூத்த மகள் செல்வியின் கணவர். இந்த அடையாளங்களை எல்லாம் தாண்டி திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் ஆசிரியராக இருந்தவர் முரசொலி செல்வம்.

திராவிட இயக்கத் தளபதிகளுள் ஒருவரான திருவாரூர் ஏ.டி.பன்னீர்செல்வத்தின் நினைவாகவே பன்னீர்செல்வம் என்ற பெயரைத் தனது மருமகனுக்கு வைத்தார் கருணாநிதி. பிறகு அந்தப் பெயர் செல்வமாகச் சுருங்கிவிட்டது. அண்ணாவுக்கு நெருக்கமாக இருந்தவர், முரசொலியின் ஆசிரியராக இருந்தவர், கலைஞருக்கும் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட்டவர், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் திமுக தலைமைக்கும் இணைப்புப்புள்ளியாக இருந்தவர்,

முரசொலி மாறன் நேரடி அரசியலில் இருந்தபடி கலைஞருக்கு உதவினார் என்றால், முரசொலி செல்வம் பின்னணியில் இருந்து உதவினார் என்று பல செய்திகள் முரசொலி செல்வத்துடன் இணைத்துச் சொல்லப்படுகின்றன. இவற்றை எல்லாம் தாண்டி இரண்டு அரசியல் நிகழ்வுகளோடு முரசொலி செல்வத்தை நினைவுகூர வேண்டியிருக்கிறது. முதல் நிகழ்வு, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வு. இரண்டாவது நிகழ்வு, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்டு, சட்டமன்றக் கூண்டில் ஏற்றப்பட்ட நிகழ்வு.

எண்பதுகளில் திருச்செந்தூர் ஆலய சரிபார்ப்பு அதிகாரி சுப்ரமணியப் பிள்ளை மர்மக்கொலை தொடர்பாக எம்ஜிஆர் அரசு ஓய்வுபெற்ற நீதிபதி சி.ஜே.ஆர்.பால் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. அந்தக் கமிஷனின் அறிக்கையை எம்ஜிஆர் அரசு வெளியிடாத நிலையில், அதை எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர் திடீரென ஒருநாள் பத்திரிகையாளர்களிடம் வெளியிட்டு எம்ஜிஆர் அரசுக்கு நெருக்கடியை உருவாக்கினார். ஆத்திரமடைந்த எம்ஜிஆர் அரசு உடனடியாக முரசொலி அலுவலத்துக்குள் சோதனை நடத்தியது. அரசு அதிகாரி சதாசிவம், உதவியாளர் சண்முகநாதன் ஆகியோரோடு சேர்ந்து முரசொலி செல்வத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தது.

தொண்ணூறுகளில் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதி பேசிய பேச்சு முரசொலியில் வெளியானது. அப்போது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட பகுதியைப் பிரசுரித்த குற்றத்துக்காக முரசொலி மீது உரிமைமீறல் பிரச்னை எழுப்பப்பட்டது. முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வத்தை சட்டமன்றத்தில் வைத்து கண்டிக்கப்போவதாக அறிவித்தார் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தை அணுகினார் முரசொலி செல்வம். அப்போது முரசொலி செல்வம் மன்னிப்பு கோருவதாக இருந்தால், பிரச்னையை விட்டுவிடும்படி சபாநாயகரைக் கேட்டுக்கொள்வோம் என்றார் நீதிபதி. ஆனால் அவையிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகள் எவையென்று தெரியாத நிலையில், குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கமுடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் முரசொலி செல்வம்.

அதனைத் தொடர்ந்து டெல்லி சென்று மக்களவை சபாநாயகரை சந்தித்துப் பேசிவிட்டு வந்த சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, உடனடியாக முரசொலி செல்வத்தைக் கைது செய்ய உத்தரவிட்டார். சட்டப்பேரவை கூடும் நாளில் நேரில் வந்து ஆஜராகவேண்டுமென முரசொலி செல்வத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, சட்டமன்றத்தில் அதுவரை இல்லாத வகையில் நீதிமன்றத்தில் இருப்பது போன்ற சிறப்புக்கூண்டு கொண்டுவரப்பட்டது. சட்டமன்றத்துக்கு வந்த முரசொலி செல்வம், அந்தக் கூண்டில் ஏறி நின்றார். பிறகு கண்டனத்தீர்மானத்தை வாசித்தார் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா.

ஜெயலலிதா ஆட்சியில் பத்திரிகைகளுக்கு எதிரான அடக்குமுறை நிகழ்வாக விமர்சிக்கப்படும் இந்த நிகழ்வு பற்றி முரசொலியில் எழுதிய கலைஞர், அந்தக் கடிதத்துக்கு வைத்த தலைப்பு, “கூண்டு கண்டேன், குதூகலம் கொண்டேன்” என்பதுதான். அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இரண்டு அதிமுக முதலமைச்சர்களாலும் கைது நடவடிக்கைக்கு உள்ளானவர் முரசொலி செல்வம். முரசொலிக்குக் கட்டுரைகள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்த முரசொலி செல்வம், புதிய கட்டுரையை எழுதுவதற்கான குறிப்புகளைத் தயார் செய்திருந்த நிலையில், திடீரென மரணம் அடைந்திருக்கிறார். அந்தக் குறிப்புகளோடு முரசொலிக்கும் முரசொலி செல்வத்துக்குமான அரைநூற்றாண்டு உறவு முடிவுக்கு வந்திருக்கிறது.

அதேநேரம், அவரை பற்றி எதிர்நிலைக் கருத்துக்களும் உண்டு. பெங்களூரில் உதயா டிவி சேனல், பண்ணை வீடு, பல நூறு ஏக்கர் சொத்துக்கள், சென்னை கோட்டூர்புரத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு அரண்மனை வீடு, படத்தயாரிப்பு நிறுவனம் இதெல்லாம் இவருக்கு எப்படி வந்தது என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link