Share via:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது குற்றம் சுமத்தியது மட்டுமின்றி
எடப்பாடி பழனிசாமியின் அமைச்சர்கள் பற்றி ஏடிஎம்கே ஃபைல்ஸ் வெளியிடுவேன் என்று அதிரடி
கிளப்பிவந்தார் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. அதனால் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு
எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டார். அதன் பிறகும் தொடர்ந்து அ.தி.மு.க. மீதும் தாக்குதல்
நடத்திவந்தார்.
இந்த நிலையில் திடீரென அண்ணாமலை உறவினர்கள் மீது ஐ.டி. ரெய்டு
பாய்ந்தது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் தன்னையே சாட்டையால்
அடித்துக்கொண்டு பரபரப்பைக் கிளப்பினார் அண்ணாமலை. ஆனால், இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.
ஐ.டி. விங் சரியான பாதையில் புகுந்து விளையாடியது.
சென்னை முழுக்கவே யார் அந்த சார்? என்று போஸ்டர் ஒட்டி போராட்டம்
நடத்தினார்கள். அது மட்டுமின்றி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க.வினர்
ஃப்ளாஷ்மாப் ஸ்டைலில் யார் அந்த சார் என்ற தட்டி ஏந்தி பட்டையைக் கிளப்பினார்கள். பல்கலைக்கழக
மாணவி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டாவது நபரை நோக்கியே போராட்டம் இருக்க வேண்டும்
என்பதை அ.தி.மு.க. சுட்டிக்காட்டியதற்கு மக்களும் ஆதரவு கொடுத்துவருகிறார்கள்.
அதனால் யார் அந்த சார் விவகாரம் தமிழகம் முழுவதும் செம வைரல் ஆனது.
இந்த நிலையில் முதன்முதலாக அ.தி.மு.க.வின் போராட்டத்திற்கு அண்ணாமலை ஆதரவு கொடுத்துள்ளார்.
இந்த போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து பல்வேறு அரசியல் வியூகங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
அதாவது அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து கழட்டிவிட பா.ஜ.க. மேலிடம் தயாராகிவிட்டதையே
இந்த ஆதரவு காட்டுகிறது என்கிறார்கள். அண்ணாமலை இந்த விவகாரத்தில் அமைதியாகப் போய்விட
வேண்டும் என்பதற்காகவே ரெய்டு நடத்தி மனைவி மற்றும் மச்சானிடம் கையெழுத்து வாங்கியிருப்பதாகவும்
சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியிடம் சமாதானத்துக்கு அண்ணாமலை
தூது அனுப்பியிருக்கிறார். அவர்களிடம் அண்ணாமலை பற்றி பேசுவதற்கு எதுவுமே இல்லை என்று
திருப்பியனுப்பிவிட்டாராம். ஆக, விரைவில் காட்சிகள் மாறும் என்கிறார்கள்.