Share via:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எப்போது, எது குறித்து அறிக்கை விடுவார்? அவரை எப்படி கிண்டல் செய்யலாம் என்று திராவிட கட்சிகளின் ஐ.டி.விங் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயாய் வேலை செய்து வருகிறது.
சமீபகாலமாக அவர்களை ஏமாற்றாமல் தினம் ஒரு கண்டெண்ட்டை வாரி வழங்கி வருகிறார் விஜய். தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், விஜய் முகம் பொறித்த சட்டையை அணிவதில் மட்டுமே முனைப்பு காட்டுகிறாரே தவிர கட்சியின் வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால், ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்து இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுபோதாதா விமர்சகர்களுக்கு? தமிழ் பண்டிகைகளுக்கு அதாவது நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காமல் அண்டை மாநிலமான கேரளத்தின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். இவருக்கு அரசியல் என்றால் என்னவென்றே புரியவில்லை. அவரிடம் சரியான ஐ.டி. விங் இல்லையா என்று கிண்டலடிக்கிறார்கள் திராவிடக் கட்சியினர்.
இதுபோதாதென்று அடுத்த கண்டெண்ட்டாக பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் இவர் என்ன திடீரென்று திராவிட அரசியலுக்கு வந்துவிட்டார்? மாற்றம் வேண்டுமென்றல்லவா நினைத்தோம்? இவர் என்ன குட்டையை குழப்புகிறார் என்று பாவம் மக்களே குழம்பிப் போயுள்ளார்கள்.
மொத்தத்தில் விஜய் தைரியமாக தனக்கு கிடைத்து வரும் 250 கோடி ரூபாய் சம்பளத்தை சட்டென்று அரசியலுக்கு வந்ததெல்லாம் சரிதான். பாராட்ட வேண்டியதுதான். ஆனாலும் அவருக்கு அரசியல் ஞானமும், அனுபவமும் இல்லையென்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் தன்னை சுற்றியாவது அரசியலில் அனுபவம் உள்ளவர்களை வைத்திருக்க வேண்டுமல்லவா?
அப்படி இருந்தால் மட்டுமே அரசியலில் மூத்தவர்கள் ஆடும் ஆடு புலி ஆட்டத்தில் சாதுர்யமாக காய் நகர்த்த முடியும்? இது எங்களுடைய கருத்து மட்டுமல்ல. விஜய் ஆட்சி அமைத்தால் அவரால் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் சாமான்ய மக்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாகவே உள்ளது. அறிவார்ந்த மக்களை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும் திரு.விஜய் அவர்களே….