Share via:
திமுக நேற்றைய தினம் அறிவித்த எம்.பி. பட்டியலில் கான்ஸ்டண்டைன்
ரவீந்திரனை திமுக வேட்பாளராக அறிவித்தது. அவர் தேமுதிகவில் இருந்து வந்தவர் என்பதால்,
இந்த தேர்தலில் இரண்டு தேமுதிகவினருக்கு ராஜ்யசபா சீட்டா என்று பரம்பரை திமுகவினர்
கொதிக்கிறார்கள். அதேபோல் காங்கிரஸ் எம்.பி.யாகும் கிறிஸ்டோபர் திலக் யார் என்றும்
கேள்வி எழுந்துள்ளது.
திமுகவின் சார்பில் அதன் செய்தி தொடர்பாளர் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன்
எம்.பி. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ரவீந்திரன் இதற்கு முன்பு தேமுதிகவில் இருந்து
பின்னர் திமுகவிற்கு வந்தவர். இவர்
2014 மக்களவை தேர்தலின் போது பாஜக மற்றும் தேமுதிக கூட்டணியின்
சார்பில் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்டவர். அந்த தேர்தலில்
அதிமுகவின் எஸ்.ஆர். விஜயகுமார் வெற்றி பெற திமுக சார்பில் போட்டியிட்ட தயாநிதிமாறன்
தோல்வி அடைந்தார்.
தேமுதிக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரன் 114798 வாக்குகள் பெற்று
08% வாக்குகளுடன் 03 வது இடம் பிடித்தார். சுமார் 45841 வாக்குகள் வித்தியாசத்தில்
அதிமுக வேட்பாளரிடம் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தோல்வி அடைந்த நிலையில் தயாநிதி
மாறன் தோல்விக்கு தேமுதிக வேட்பாளர் ரவீந்திரன் பெற்ற வாக்குகளும் ஒரு முக்கிய காரணமாக
கூறப்பட்டது. திமுகவை தோற்கடித்தவருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் யார் இந்த கிறிஸ்டோபர் திலக் என்று கேள்வி எழுந்துள்ளது.
அரசியலில் இப்படி ஒரு மனிதனா என்று சந்திப்பவர்கள் அனைவரையும்
கிறிஸ்டோபர் திலக், தற்போது மணிப்பூர் மேகாலயா, மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களின்
காங்கிரஸ் பொறுப்பாளராக இருக்கிறார். அந்த ஊர்களின் குக்கிராமத்திலும் பழங்குடி வாழ்விடங்களிலும்
உள்ள மக்களுடனேயே இருப்பார். கடின பாறைகளிடையே தானே வாகனத்தை ஓட்டி சென்று அந்த மலை
மக்களின் பிரச்சினைகளை எப்படி தீர்க்க முடியும் என்று தொடர்ந்து முயற்சி மேற்கொள்பவர்.
அவரது வீடு திருச்சி என்பதால், திருச்சியில் இருக்கும் போதெல்லாம்
திருச்சி மாவட்ட தலைவருடன் மக்கள் பணி மேற்கொள்வார். எதிரே இருக்கும் மனிதனை அவ்வளவு
துல்லியமாக புரிந்து கொள்ள கூடியவர். பாதிக்கப்பட்டவருடன் நிற்பதே அரசியல் என்பதில்
ஆழமான நம்பிக்கை உடையவர். அவரது தாத்தா தேயிலை தொழிலாளி, அதன் பிறகு தந்தை முதல் தலைமுறை
பட்டதாரி, இவர் இரண்டாம் தலைமுறை எஞ்சினியரிங் மற்றும் எம்.பி.ஏ. முடித்து விட்டு,
கார்ப்பரேட்டில் பெரிய வேலை. முப்பது வயதில் வேலை எல்லாம் விட்டுவிட்டு பொது வாழ்வில்
காங்கிரஸ் கட்சியுடன் பயணிக்கிறார். சமூக நீதி பற்றி திலக் வகுப்பெடுத்தால் எல்லாரும்
கேட்டுக் கொண்டே இருப்பார்கள். சுவாரஸ்யமாகவும் கூர்மையாகவும் கருத்துகளை கடத்த கூடியவர்.
அரசியல் கற்று கொள்ள விரும்புபவர்கள் அவரது நேர்காணல்களை காணலாம்.
அவரது ஆங்கில புலமையில் ராஜ்ய சபையில் கருத்துகளை கேட்க ஆர்வமாக
இருக்கிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் முதலமைச்சருடன் சுமார் 15 மாநிலங்களில்
காங்கிரஸ் கட்சிக்காக பணி புரிந்தவர். எந்த சாதிய சாதகமோ வர்க்க சாதகமோ பெரிதாக இல்லாமல்
உழைப்பினால் அரசியலில் மேம்படுவது காங்கிரஸ் கட்சியில் சாத்தியம் என்கிறார்கள்.
அதேநேரம் அதிமுகவில் மீண்டும் தம்பிதுரைக்குக் கொடுக்கப்பட்டிருப்பது
கட்சிக்குள் கடும் அதிருப்தியைக் கொடுத்திருக்கிறது.
