Share via:
இந்திய அணியின் சுழற்பந்து
வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக
அறிவித்து, கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தார். அவமானத்தால் அவர் ஓய்வு
அறிவித்திருப்பதாக தெரியவந்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு
எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் தொடருக்கு இடையே அவர் இந்த அறிவிப்பு வெளியிட்டதால், இதையொட்டி
கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதாவது, அஸ்வின் இந்த தொடரில் ஆடுவதற்கு விருப்பமாக
இருந்தார். ஆனால் 3 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவே இல்லை. இந்திய அணியின்
ஸ்பின் பவுலிங் சரியாக இல்லை என்றபோதும் அஸ்வினுக்கு வாய்ப்பு இல்லை.
ஆல் ரவுண்டராக அஸ்வின்
நன்றாக பேட்டிங்கும் செய்வார். ஆஸ்திரேலியாவில் நல்ல அனுபவமும் உள்ளது என்பதை எல்லாம்
கேப்டர் ரோகித் சர்மாவும் கெளதம் கம்பீரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் அவமானப்படுத்தியதாலே
இப்படியொரு முடிவை அறிவிக்க நேர்ந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அஸ்வினின்
தந்தை ரவிச்சந்திரன் அளித்த பேட்டியில், “அஸ்வின் என்ன நினைக்கிறார் என்று எனக்குத்
தெரியாது. அவர் ஓய்வை அறிவித்து விட்டார். அதனை முழு மனதுடன் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
அவரது அறிவிப்பு ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும் இன்னொரு வகையில் அவர் தொடர்ந்து
விளையாடலாம் என்று கருதுகிறேன். அஸ்வினின் முடிவில் நான் தலையிட முடியாது. ஆனால் அவர்
ஓய்வை அறிவித்ததற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அவை என்னவென்று அஸ்வினுக்கு
மட்டும்தான் தெரியும். அவமானம் கூட அவர் ஓய்வை அறிவித்ததற்கு காரணமாக இருக்கலாம்’’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தந்தையின்
பேச்சுக்கு மறுப்பு தெரிவித்திருக்கும் அஸ்வின், தனது தந்தைக்கு ஊடகத்தினரிடம் எப்படி
பதில் அளிப்பது என்பது குறித்து பயிற்சி இல்லை. அதனால் இப்படி பேசிவிட்டார். அவர் பேசியதை
யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டிருக்கிறார். அதேநேரம், அவருக்கு
அவமானம் நிகழ்த்தப்பட்டது குறித்து அஸ்வின் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.