Share via:

அண்ணா தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒருங்கிணைக்க
வேண்டும் என்ற கோரிக்கையில் எடப்பாடி பழனிசாமிக்கும் மூத்த தலைவர் செங்கோட்டயனுக்கும்
நீண்ட நாட்களாகவே பனிப்போர் நடந்துவருகிறது. செங்கோட்டையன் மூலம் பா.ஜ.க. அரசியல் அதிரடி
நிகழ்த்த இருப்பதாகவும் பா.ஜ.க. கூட்டணிக்கு வளைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில்
இரண்டாவது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணிப்பு
செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக சட்டசபை நடந்துவரும் சூழலில் சபாநாயகர் அப்பாவுவை இரண்டாவது
நாளாகவும் இன்று சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன். இதையடுத்து செங்கோட்டையன் தர்ம
யுத்தத்திற்கு தயாராகிறாரா, இவர்தான் அ.தி.மு.க.வை உடைக்கப்போகும் ஷிண்டேவா என்றெல்லாம்
கேள்விகள் எழுந்துள்ளன. இன்று சட்டமன்றத்துக்கு வருகை தந்த செங்கோட்டையன் எடப்பாடி
பழனிசாமி நடத்திய எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்தார்.
அதோடு, அ.தி.மு.க. வெளிநடப்பு செய்த நேரத்தில் செங்கோட்டையனும்
வெளிநடப்பு செய்தார் என்றாலும் எடப்பாடி பழனிசாமியுடன் நிற்காமல் காரில் ஏறி வெளியே
போய்விட்டார். ஆகவே, இரண்டு பேருக்கும் ஊடல் நிலவுவது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் செங்கோட்டையன் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.
அவரது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் பன்னீர் போன்று தர்மயுத்தம் நடத்தி இரட்டை
இலையை முடக்குவார் என்று சொல்கிறார்கள்.
இந்த நிலையில் செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம்
பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, ‘’எங்கள் கட்சியில் சுதந்திரம் உள்ளது. யாரும்
என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’’ என்று சமாளித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்படி இஷ்டப்படி
ஆளாளுக்கு செயல்படுவது என்றால் இது கட்சியா அல்லது சந்தை மடமா என்று அவரது கட்சியினரே
கடுப்பாகிறார்கள்.