Share via:
பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வரும் நிலையில், அவர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை என்ன என்பது அரசாங்கம் மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பது இல்லை. அதற்கு ஏற்ப வகையில் பாகிஸ்தானில் ஒரு அபூர்வ சம்பவம் நடந்துள்ளது.
மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் நவீன தொழில்நுட்பத்தின் வெளிப்பாடான சி.சி.டி.வி. கேமராக்கள் குற்றங்களை தடுக்கவும், நடந்து முடிந்த குற்றங்களுக்கு சாட்சியாகவும் அமைந்துவிடுகிறது. கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றங்களில் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடிக்க சி.சி.டி.வி.யின் பங்கு அளப்பரியது. அதிகபட்சமான வழக்குகள் தீர்த்து வைக்கப்படுவது சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில்தான் என்று கூறினால் அது மிகையாகாது. ஆனால் அப்படிப்பட்ட சி.சி.டி.வி. கேமராவை இப்படி கூடவா பயன்படுத்த முடியும் என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவம்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய மகளின் பாதுகாப்புக்காக அவரின் தலையில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தியுள்ளார். 24/7 செயல்படும் வகையில் 360 டிகிரி கோணத்தில் சுழலக்கூடிய தன்மை வாய்ந்த சி.சி.டி.வி. கேமராவை அவர் பொருத்தியுள்ளார். இதனால் தன் தலையில் சி.சி.டி.வி.யை சுமக்க வேண்டியுள்ளதே என்ற எந்த சலிப்பும், கூச்சமும் இல்லாமல் இளம்பெண் தன் தலையில் சுமந்தபடி நடமாடுகிறார். இது குறித்த வீடியோக்கள் எக்ஸ் பக்கத்தில் வைரலாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
தனது மகளுக்கு எந்த விதத்திலும் ஆபத்து நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தன் தந்தை இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளார் என்று அந்த இளம் பெண் வீடியோவில் பேசியுள்ளார். பாதுகாப்பு என்ற பெயரில் தலையில் சி.சி.டி.வி. கேமராவை மாட்டியது சரிதானா? என்று கேள்வி எழுந்தாலும், இத்தகைய சூழ்நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டதற்கு இந்த சமூகம்தான் வெட்கிதலைகுணிய வேண்டும் என்று பெண்கள் தரப்பில் இருந்து கருத்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.