Share via:
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 3வது மாடியில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவ மாணவி சடலமாக மீட்கப்பட்டார். 31 வயதான அவரின் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தநிலையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் தாக்கம் இன்றும் அடங்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இந்த கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்ற நபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், இவ்வழக்கு கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. சஞ்சய் ராய் முதலில் நான் தான் கொலை செய்தேன். என்னை வேண்டுமென்றால் தூக்கில் தூக்கில் போட்டுக்கொள்ளுங்கள் என்று திமிராக வாக்குமூலம் அளித்தான். அதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில், கான்ஃபிரென்ஸ் ஹாலுக்கு தான் செல்லும் போதே பெண் மருத்துவர் ரத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடந்தார் என்று அந்தர்பல்டியடித்தார். இதனால் வழக்கின் போக்கு முற்றிலும் மாற்றம் அடைந்தது.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக இருந்து வந்த சந்தீப்கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்து சந்தேகத்தை கிளப்பினார்.
இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஸ்ரீராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் சுசிப்தோ ராய் சி.பி.ஐ.யின் விசாரணை வளையில் சிக்கியுள்ளார். அவரிடம் வடக்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் எம்.எல்.ஏ. சுதிப்தோ ராய்க்கு சொந்தமான முதியோர் இல்லத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் நோயாளிகள் நலக்குழு தலைவராக இருந்து வரும் சுதிப்தோ ராய், பெண் மருத்துவர் தொடர்பான தகவல் கிடைத்ததும் அவர் மருத்துவமனைக்கு வந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே இவ்வழக்கு தொடர்பாக அவருக்கு என்னென்ன தகவல்கள் தெரியும் என்பது குறித்த சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்குவங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரீராம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. சுதிப்தோ ராய் மீது சி.பி.ஐ. அதிகாரிகளின் சந்தேகப் பார்வை திரும்பியுள்ளது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.