Share via:
திருவள்ளுவர் என்ன சாதி? கவர்னர் ஆர்.என்.ரவியுடன் மல்லுக்கட்டு
தேர்தலையொட்டி தி.மு.க. அரசுடன் மோதுவதை தள்ளி வைத்திருந்த கவர்னர்
ஆர்.என்.ரவி, மீண்டும் திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி பிரச்னையை ஆரம்பித்துள்ளார்.
இதையொட்டி வைகாசி அனுஷத்தை திருவள்ளுவர் திருநாளாக கொண்டாடுவதாக அறிவித்து மயிலாப்பூர்
திருவள்ளுவர் திருக்கோயிலில் திருவள்ளுவரை தரிசனம் செய்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், ‘’திருவள்ளுவருக்கு காவிச் சாயம்
பூசியதற்கு தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
திருவள்ளுவருக்கு காவி அணிவித்ததன் மூலம் ஆளுனர் ரவி மரியாதை செலுத்தவில்லை; இந்துமயப்படுத்தி
அவமரியாதை செய்துள்ளார். இந்து மத அடையாளத்தை திருவள்ளுவர் மீது திணிக்கும் அறிவீனம்.
திருவள்ளுவர் இந்து என்றால், என்ன சாதி? ஏனென்றால், சாதிகளின்
தொகுப்பு தான் இந்து மதம். இந்து என்றாலே, சாதியை சொல்லித்தான் ஆகவேண்டும். திருவள்ளுவரின்
சாதியை ரவி சொல்ல தயாரா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு,
‘’ரவி பார்ப்பனர் அல்ல, பார்ப்பனர் போல வேடம் தரித்து திரிபவர். பீகாரில் ரன்வீர சேனா
எனும் சாதி வெறி படையை பூமிகார் சாதியைச்சார்ந்தவர்கள் தொடங்கி, 1992 ஆம் ஆண்டு கொத்து
கொத்தாக தலித்களை படுகொலை செய்தது. அக்கும்பலை ஆதரித்தவர் தான் ரவி. இப்போது தமிழ்நாட்டில்
வரலாற்று திரிபுவாதம் செய்து பண்பாட்டு படுகொலையை நடத்த முயற்சிக்கிறார். இம்மாதிரியான
பைத்தியக்காரத்தனத்தை பீகாரிலேயே மூட்டை கட்டி வைப்பது நல்லது’’ என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, ‘’ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் எதிர்ப்பு வெடிக்கும்
என்று தெரிந்திருந்தும், வேண்டுமென்றே ‘நம்மை யார், என்ன செய்ய முடியும்?’ என்ற ஆணவத்தில்
தமிழர்களை சீண்டுகிறார். அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட திருவள்ளுவர் படத்திற்கு
ஆளுநர் காவி சாயம் பூசலாமா? தமிழ்நாட்டு மக்களுடனும், அரசுடனும் மோதிப் பார்க்க விரும்புவது
விபரீதமானது.
ஆளுநரின் அடாத செயல்களை
எதிர்த்து விரைவில் கண்டனப் போராட்டம்! மாநில அரசை மட்டுமல்ல – தமிழ்நாட்டு மக்களையும்
அவமானப்படுத்தும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் தொடர்ந்து, திட்டமிட்ட வகையில்
செயல்படும் இந்த ஆளுநரை எதிர்த்துக் கண்டனங்கள் வெடிப்பது தவிர்க்க முடியவே முடியாது.
அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும் கலந்து ஆலோசித்து மாபெரும் கண்டனப் போராட்டத்தை
நடத்திட கழகம் முயற்சிகளை மேற்கொள்ளும்..’’ என்று தெரிவித்திருக்கிறார்.