Share via:
‘நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால் ஏழைகள் வேதனைப்பட மாட்டார்’ என்று எம்.ஜி.ஆர். பாடிய ஸ்டைலில் விஜய்
அடுத்த படமான, ‘ஜன நாயகன்’ அறிவிப்பு வெளியானது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்நிலையில், இன்று நடப்பதாக இருந்த நிர்வாகிகள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது
சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
அரசியல் கட்சி தொடங்கிய
விஜய் தன்னுடைய 69 ஆவது திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என்பதை அறிவித்து விட்டார்.
ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்துக்கு ‘ஜனநாயகன்’ என தலைப்பு வைத்ததுடன் இரண்டு போஸ்டர்கள்
வெளியிடப்பட்டன.
விஜய் தொடர்புடைய
இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது அவருக்கு ஆதரவு தெரிவித்து அவரின்
ரசிகர்கள் நெய்வேலி படப்பிடிப்பு தளத்தில் கூடினர். அவர்களுடன் வேன் மீது ஏறி செல்பி
எடுத்துக் கொண்டார் விஜய். அதை நினைவூட்டும் வகையில் முதல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது
போஸ்டரில் விஜய் சாட்டை எடுத்து சுழற்றும் காட்சியும் இடம் பெற்றிருக்கிறது. இந்த போஸ்டரில்
எம்.ஜி.ஆர் பாடலின் வரியான ‘நான் ஆணையிட்டால்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.
இதையடுத்து எம்.ஜி.ஆர்.
கட்சியை ஆரம்பித்தவுடன் தி.மு.க.வின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதேபோல் விஜய் கட்சி
ஆரம்பித்ததும் தி.மு.க. ஆட்சியும் முடிவுக்கு வரும் என்கிறார்கள்.
அதற்கு தி.மு.க.வினர்,
‘’நிர்வாகிகள் கூட்டத்தையே நடத்துவதற்கு வழியில்லாத விஜய் ஆட்சியைப் பிடிப்பாரா?’ என்று
கிண்டல் செய்கிறார்கள். இன்று சில மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திக்க இருப்பதாக கூறப்பட்டிருந்த
நிலையில், திடீரென இந்த சந்திப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திலேயே இப்படி சொதப்பினால்
எப்படி என்று கேள்வி எழுப்புகிறார்கள்.