Share via:

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவதற்கான
இறுதி திட்ட அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து திட்டப்பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு
வரும் 2028 முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,
பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதற்கு விட மாட்டோம் என்று போராடிய சீமான், விஜய் என்ன
செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை
என்பதால் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் கட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதற்கு 29 ஆயிரத்து 150 கோடி ரூபாய் செலவாகும் என்று திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின்
‘டிட்கோ’ நிறுவனம் இந்த விமான நிலையத்தை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பரந்தூர்
மற்றும் அதை சுற்றியுள்ள 13 கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்து 300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த
திட்டமிடப்பட்டதில் ஏகனாபுரம், நாகப்பட்டு மாதிரியான கிராமங்கள் மொத்தமாக கையகப்படுத்தப்படுகின்றன.
ஆரம்ப கட்டத்திலிருந்தே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இந்த
திட்டத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர். ஆனால், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் சீமான்,
விஜய்யும் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இங்குள்ள குடும்பத்தினருக்கு
கூடுதல் நிதி கொடுத்து வெளியேற்றும் வேலையை தி.மு.க.வினர் செய்துவருகிறார்கள்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு சிவில் விமான போக்குவரத்து
அமைச்சகம் அனுமதி வழங்கியது. இதன் தொடர்ச்சியாக மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியது.
இவ்வாறு இருக்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில் திட்ட அனுமதியானது
தற்போது வழங்கப்பட்டுள்ளது. எனவே, இனி வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் சீமான், விஜய் போன்றோர் நீதிமன்றத்துக்குப் போவார்களா
அல்லது போராட்டம் நடத்துவார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. பரந்தூரை காப்பாரா விஜய்
என்பது விரைவில் தெரிந்துவிடும்.