Share via:
பனையூர் பங்களாவில் இருந்து அரசியல் செய்துவரும் நடிகர் விஜய்
சுற்றுப்பயணம் செய்தால் அரசியல் நிலவரமே மாறிவிடும். முதலமைச்சராக வந்து விஜய் வந்து
உட்காருவார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், இதுவரை எந்த கட்சியும்
செய்யாத வகையில் வீக் எண்ட் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார் விஜய்.
அதன்படி வரும் செப்டம்பர் 13 சனிக்கிழமை ,திருச்சி மரக்கடை பகுதியில்
2026 அரசியல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தவெக தலைவர் விஜய் தொடங்குகிறார். நாலு மாதங்களில்
ஒவ்வொரு சனிக்கிழமையும் மக்கள் மனதில் பேச இருக்கிறார்.
இது எதிர்க்கட்சிகளின் கடுமையான கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. அதேநேரம்
விஜய் கட்சியினர், ‘’வார நாட்களில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள், போக்குவரத்து
ஆகியோருக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்ள. பெண்கள், குடும்பம், மூத்தோர்கள் கூட
சுலபமாக பங்கேற்கலாம். வேலைநாள் வாழ்க்கையை பாதிக்கும், மக்கள் வசதியை முன்னிலைப்படுத்தும்
பொறுப்பான அணுகுமுறை’’ என்று பாராட்டி வருகிறார்கள்.
அதேநேரம், விஜய் ஆட்சிக்கு வந்தால் மக்கள் சனி, ஞாயிறு மட்டும்
வேலை செய்தால் போதும்; மற்ற ஐந்து நாட்கள் விடுமுறையாக அறிவிப்பார் என்று கிண்டல் செய்கிறார்கள்.
இதனை அண்ணாமலையும் கலாய்த்திருக்கிறார்.
அவர் விஜய் பயணம் குறித்து, ‘’தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மட்டும்தான்
மக்களை பார்ப்பேன் என்பது ஏற்கத்தக்கது அல்ல. 24 மணிநேரமும் களத்தில் நிற்க வேண்டும்.
திமுக-வுக்கு எதிரி என தவெக, சொல்லிக் கொள்ளும் நிலையில், அதனை அவர்கள் செயலில் காட்ட
வேண்டும். அப்போதுதான் மக்கள் நம்புவார்கள். பாஜக கட்சி தலைவர்களை தினமும் பார்க்க
முடியும். பாஜக கட்சி கூட்டங்கள் தினமும் நடக்கும். ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருப்பவர்கள்
24 மணி நேரமும் களத்தில் இருக்க வேண்டும் என்பது மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பு.
நாங்களே மாற்று எனச் சொல்லும் தவெக, சனிக்கிழமை மட்டுமின்றி, முழு
நேர அரசியல் செய்யட்டும். அரசியல் செய்வோர் முழு நேரமாக அரசியலில் பணியாற்ற வேண்டும்.
களத்தில் ஏழு நாட்களும் செயல்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க வாரம் ஒரு நாள் பிரசாரம் செய்தால்
போதும் என்ற மனநிலை விஜய்க்கு எப்படி உருவானது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. பார்ட்
டைம் அரசியல்வாதியாக இருக்கிறாரே..