Share via:
’அ.தி.மு.க.வை ஜாதிக் கட்சியாக மாற்றி வைத்திருக்கும் எடப்பாடி
பழனிசாமியின் சதியை முறியடித்து பழைய அ.தி.மு.க.வை உருவாக்கி 2026ல் ஆட்சியைப் பிடிப்பேன்’
என்று சபதம் போட்ட சசிகலாவுக்கு அவரது உறவினர் டிடிவி தினகரனே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
தினகரனையே சமாளிக்க முடியாத சசிகலா அ.தி.மு.க.வை மீட்கப் போகிறாரா என்று அ.தி,மு.க.வினர்
கிண்டல் செய்கிறார்கள்.
சிறையில் இருந்து திரும்பிய சசிகலா இத்தனை காலமும் தொடர்ந்து எடப்பாடி
பழனிசாமிக்கு தூது அனுப்பிக்கொண்டே இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வில்
சேர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது சசிகலாவுக்குப் புரிந்துவிட்டது.
எனவே, ‘ஜாதிக் கட்சியாக அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார்.
எல்லோரையும் ஒருங்கிணைத்து அ.தி.மு.க.வை பழைய அ.தி.மு.க.வை உருவாக்குவேன். அதிமுகவில்
நடக்கும் இந்தக் கூத்துகளை எல்லாம் இனியும் தான் வேடிக்கை பார்க்க முடியாது. விரைவில்
அதிமுகவில் ரீ என்ட்ரி கொடுக்கப்போகிறேன். அனைவரையும் ஒருங்கிணைத்து பழைய அதிமுகவை
போல மாற்றுவேன், 2026ல் ஆட்சிக்கு வருவோம்’ என்று சூளுரைத்தார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி, ‘அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத
சசிகலா பேசியதற்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்று கூறிவிட்டார். மூத்த தலைவரான
ஜெயக்குமாரும், ‘சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர்
ரீ என்ட்ரி கொடுப்பதெல்லாம் கனவில் கூட நடக்காது’ என்ரு கூறினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ‘”சசிகலா
பேசுவார்கள். பேசட்டும். எங்களை பொறுத்தவரை அ.ம.மு..கவின் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லி
விட்டோம். கடந்த 2017-ம் ஆண்டு அ.தி.மு.க.வை விட்டு விலகி வந்து அ.ம.மு.க.வை ஏன் தொடங்கினோம்
என்பது எல்லோருக்கும் தெரியும்.
அன்றைக்கு எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த ஆணவம், இன்றைக்கும் அப்படியே
இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அந்த ஆணவம் இன்னும் பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
ஓபிஎஸ்ஸை வெளியேற்றும் அளவுக்கு எடப்பாடி சென்றிருக்கிறார். எனவே, இனியும் அதிமுகவுடன்
நாங்கள் இணைவோம் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது.’’ என்று சொல்லி சசிகலாவின் திட்டத்துக்கு
முட்டுக்கட்டை போட்டுவிட்டார்.
’தினகரன் கட்சியை சமாளிக்க முடியாத சசிகலா அ.தி.மு.க.வை ஒன்று
சேர்க்கிறது நடக்கிற காரியமா.. முதல்ல நீங்க ஒற்றுமையா இருங்க, அப்புறம் கட்சியை மீட்கலாம்’
என்று சசிகலாவுடன் இருப்பவர்களே கிண்டல் செய்கிறார்கள்.