Share via:
தமிழகத்திற்கு கண்டிப்பாக காவேரி நீரை தரமாட்டோம் என்று கர்நாடகா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் கலந்து கொண்டனர். மேலும் கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர்.
இக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையாவது:
பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நிலுவையில் உள்ள 3.5 டி.எம்.சி. தண்ணீரை தடையின்றி தரவும், இந்த மாதம் (ஏப்ரல்) மற்றும் மே மாதங்களுக்கான நீரையும் தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்த கோரிக்கையை அறவே மறுத்து கர்நாடக அரசு தெரிவித்துள்ள பதிலில், கர்நாடகாவில் வறட்சி நீடித்து வருவதால், தமிழகத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட முடியாது. மேலும் நீர் இருப்பு மற்றும் சூழலை கருத்தில் கொண்டு மட்டுமே தண்ணீர் தருவது பற்றி முடிவு எடுக்க முடியும் என்று திட்டவட்டமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழக அரசின் அடுத்த நகர்வு என்ன என்பது குறித்து விரைவில் தெரியவரும்.