Share via:
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நேற்று முன்தினம் இரவு நாம் தமிழர்கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில் அங்கு கூடியிருந்த மக்கள் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள் சிலர் மேடை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த கற்கள் மேடைக்கு முன்பு நின்று கொண்டிருந்த கட்சியினர் மீது விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, ‘‘கூட்டத்தில் யாரோ கற்களை வீசி எறிந்துள்ளனர். இதற்கு நாங்கள் அஞ்சப்போவது கிடையாது. பல இடங்களில் பார்த்துவிட்டோம். எங்களுக்கு இது ஒன்றும் புதிது கிடையாது. இன்னும் நிறைய கற்களை வீசுங்கள். அந்த கற்களை சேகரித்து உங்களுக்கு சமாதி கட்ட முடியும். இன்னும் நிறைய வீசுங்கள் நாங்கள் கோட்டையை கட்டி இந்த நாட்டை ஆளுகிறோம்’’ என்று தனக்கே உரிய கிண்டல் கலந்த ஆவேச பாணியில் பேசினார்.
