Share via:
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் எங்கு பார்த்தாலும் தற்போது மரண ஓலம் கேட்டு வருகிறது. அதிகாலை 1 மணி முதல் 4 மணி முதல் ஏற்பட்ட அடுத்தடுத்த 3 நிலச்சரிவுகளில் 500 குடும்பங்கள் மண்ணுக்குள் புதைந்துள்ளது. சூரல்மலை, முண்டக்கை, மெம்ப்பாடி பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து மீட்புப்பணி இன்று தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்று வருகிறது. அதன்படி பலி எண்ணிக்கை தற்போது 200ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்து 2 நாட்கள் ஆவதால், சடலங்கள் நீர் மற்றும் சகதியில் ஊறிப்போய் மீட்புப்பணியின் போது உடல் பாகங்கள் பிரிந்து வருவது உச்சகட்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலியானவர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று மத்திய அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்தநிலையில் மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது மத்திய மந்திரி அமித்ஷா அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் பேசும்போது, கடந்த 5 நாட்களுக்கு முன்னதாகவே மத்திய அரசு மழை குறித்து கேரளா மாநிலத்துக்கு எச்சரிக்கை வழங்கியது. மேலும் மழை மற்றும் நிலச்சரிவு குறித்து சம்பவம் நடந்த 2 நாட்களுக்கு முன்பாகவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த அவசர எச்சரிக்கையை கேரள மாநிலம் ஏன் புறம் தள்ளியது ஏன்? இருப்பினும் தேசிய பேரிடர் மீட்புப்படை நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்கூட்டியே சம்பவ இடத்தை சென்றடைந்தனர் என்று தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை சூறாவளி குறித்து 3 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த எச்சரிக்கையை குஜராத் அரசு துரிதகமாக ஏற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால்,அங்கு ஒரு பசு கூட இறக்கவில்லை. இயற்கை பேரிடர் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடும் 4 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 90 சதவீதம் தொகையை செலவழிப்பதற்கு மத்திய அரசிடம் அனுமதி பெற தேவையில்லை. இருப்பினும் கேரள அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும். இனி வரும் காலங்களிலாவது மத்திய அரசு முன்கூட்டியே கொடுக்கும் எச்சரிக்கையை மாநில அரசுகள் படித்து பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசினார்.