Share via:
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக அமைக்கப்பட்ட தற்காலிகமான பெய்லி பாலம் சேதமடைந்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நீர் மற்றும் சேறு சகதியால் சூழப்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சூரல்மலை முண்டகை இடையே நிவாரணப் பணிகள் தொய்வடைந்தன.
அதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன்படி மேஜர் சீதா ஷெல்கே தலைமையிலான இந்திய ராணுவத்தினர் மீட்புப்பணிகளுக்காக தற்காலிகமாக பாலம் ஒன்றை அமைத்தனர். பெய்லி என்ற அந்த பாலத்தின் மீது கனரக வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் பயணம் மேற்கொண்டதால் மீட்புப்பணிகள் வேகமடைந்தன. 19 எஃகு பேனல்களை கொண்டு அமைக்கப்பட்ட அந்த பாலம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து சீதா ஷெல்கே தலைமையிலான இந்திய ராணுவனத்தினருக்கு நற்பெயரை பெற்றுத் தந்தது.
இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மீட்புப்பணிகளுக்காக அமைக்கப்பட்ட பெய்லி தற்காலிக பாலத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. முழுமையாக சேதமடைந்த பெய்லி பாலத்தில் வாகனங்கள் செல்லவும், மக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தை சீரமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.