Share via:

தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருக்கிறார் செந்தில் பாலாஜி.
இவர் கடந்த 2022ம் ஆண்டு சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால்
கைது செய்யப்பட்டார். அப்போது அவரது சகோதரர் வீடு மற்றும் ஆதரவாளர் வீடுகளில் அமலாக்கத்
துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில் செந்தில் பாலாஜி
அண்மையில் ஜாமீனில் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளியே வந்தவர் அமைச்சராக இருக்கக்கூடாது என்று ஒரு வழக்கு
பதியப்பட்டு அதுவும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் அமலாக்கத்துறையினர்
ரெய்டு ஆரம்பித்துள்ளார்கள்.
கரூர் ராயனூர் பகுதியில் அமைந்துள்ள கொங்கு மெஸ் உரிமையாளர் சுப்பிரமணி
வீடு, கரூர் பழனியப்பா நகரில் அமைந்துள்ள ஆல்பின் டவர்ஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள
அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீடு, கரூர் ஈரோடு சாலையில் உள்ள கோதைநகர் பகுதியில்
வசிக்கும் சக்தி் மெஸ் உரிமையாளர் கார்த்தி வீடு, ஆகிய மூன்று இடங்களில் கேரளாவில்
இருந்து வருகை தந்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்று குழுக்களாக பிரிந்து சோதனையில்
ஈடுபட்டுள்ளனர்.
சோதனை நடத்தப்படும் இடங்களில் தொடர்புடைய நபர்களைத் தவிர வேறு
யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளாகி இருக்கும் மூவரும்
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய
நண்பர்கள் ஆவர்.
தமிழ்நாட்டில் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில்
முறைகேடுகள் நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் துறையின் அமைச்சராக உள்ள
செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதன்
அடிப்படையில்தான் கரூரில் மூன்று இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 10 இடங்களில் சோதனை
நடைபெற்று வருகிறது. சென்னையில் மின்சார வாரிய அதிகாரிகளும் இந்த ரெய்டில் சிக்கியிருக்கிறார்கள்.
வரும் 2026 தேர்தலுக்கு செந்தில் பாலாஜியை சிறையில் வைப்பதற்குத்
திட்டமிட்டே பா.ஜ.க. அரசு இப்படி ரெய்டு நடத்துவதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகிறார்கள்.