Share via:
உடல் நிலையைக் காரணம் காட்டி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தன்னுடைய
பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இது, மோடிக்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை
என்று சொல்லப்படுகிறது. அதேநேரம், அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற கேள்வியும் முக்கியத்துவம்
பெற்றுள்ளது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜெகதீப்
தன்கர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.
அந்தக் ராஜினாமா கடிதத்தில், உடல் நலனுக்கு முக்கியத்துவம் தரவும், மருத்துவர்கள் அறிவுரை
காரணமாகவும் ராஜினாமா செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா முடிவு குறித்து பல்வேறு அரசியல்
கட்சியினரும் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்
ரமேஷ், ஜெகதீப் தன்கரின் உடல்நிலைக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம் என்றாலும்,
அவரது திடீர் முடிவுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாகச் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கிய நிலையில், முதல்
நாளே ஜெகதீப் தன்கர் ராஜினாமா முடிவை அறிவித்ததும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
குறிப்பாக பிரதமர் மோடி அடுத்த இலக்காக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்,
அடுத்த இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் யார் எனும் கேள்வி எழுந்துள்ளது.
பீகாரின் நிதிஷ்குமார் தொடங்கி தமிழகத் தலைவர்கள் வரை பலருடைய
பெயர் அடிபடுகிஆது. ஆனால், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தர்
அப்பாஸ் நக்விக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.