Share via:
சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற காரணத்திற்காக 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் 800 கி.மீட்டர் தூரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மேலும் சென்னையின் தெற்கு தென்கிழக்கு பகுதியில் 1,050 கி.மீட்டர் தூரத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வடமேற்காக தமிழ்நாடு மற்றும் இலங்கையை நோக்கி அடுத்த 2 நாட்களில் நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளிலும், உள் தமிழகத்தின் சில பகுதிகளிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் எதிரொலியாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.