Share via:
தென் மாவட்ட வெள்ளத்தை சமாளிப்பதற்கு தங்கை கனிமொழியையும், மகன் உதயநிதியையும் அனுப்பிவிட்டு, இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்கு முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றுவிட்டார். களத்தில் உதயநிதியுடன் இணைந்து இயக்குனர் மாரி செல்வராஜ் மீட்புப் பணியில் செயல்பட்டது கடும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் குடும்பம் சொந்த ஊரில் வெள்ளத்தில் சிக்கியதால், அமைச்சர் உதயநிதியும் அவரது படத்தின் ஹீரோவுமான உதயநிதியிடம் உதவி கேட்டிருக்கிறார். அன்றைய இரவே உதயநிதி அந்த கிராமத்துக்குச் செல்ல முயன்றும் முடியாமல் போயிருக்கிறது.
அடுத்த நாள் வெள்ளம் குறைந்த பிறகே உதயநிதியால் அந்த ஊருக்குப் போக முடிந்திருக்கிறது. கருங்குளம் பஸ் ஸ்டாப்பில் சிக்கியிருந்த 60 பேரும், முத்தலாங்குறிச்சி மக்களும் மீட்கப்பட்டு தேவையான உதவிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மீட்பு நடவடிக்கையில் உதயநிதியுடன் கைகோர்த்து நின்றிருக்கிறார் மாரி செல்வராஜ்.
மீட்பு நடவடிக்கையின்போது அதிகாரிகளிடம் மக்களின் தேவைகளைச் சொன்னதை உத்தரவு போட்டதாக பிரச்னை எழுந்துள்ளது. பா.ஜ.க.வின் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் மாரி செல்வராஜ் மீது, ‘அவர் என்ன மக்கள் பிரதிநிதியா… அவர் சினிமா சூட்டிங் எடுக்கிறாரா..?’ என்றெல்லாம் விமர்சனம் செய்கிறார்கள்.
வீட்டுக்குள் வெள்ளம் வந்துவிட்டது என்று வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு விஷால் ஆவேசமாகப் பேசியதை ஒரு போராளி போன்று சித்தரித்த ஊடகம், உண்மையில் களத்தில் இறங்கி உதவிசெய்த மாரி செல்வராஜை குற்றவாளி போன்று எப்படி விமர்சிக்கலாம் என்று அவரது சொந்த ஊர் மக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
இப்போது மாரி செல்வராஜுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு பிரபலங்கள் களம் இறங்கிவருகிறார்கள். மணிரத்னம், சங்கர் போன்று திரையில் மட்டும் புரட்சி செய்யாமல் மாரி செல்வராஜ் நேரடியாகவும் களத்தில் நிற்பது பெருமையளிக்கிறது என்று பலரும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல… நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பது’ என்று ட்வீட் போட்டு தன்னை எதிர்ப்பவர்களுக்கு பதில் கூறியிருக்கிறார் மாரி செல்வராஜ்.