Share via:
2024 ஒலிம்பிக் போட்டித் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாத் தற்போது பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (ஆக.6) நடைபெற்ற பெண்கள் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் கியூபா நாட்டு வீராங்கனையை எதிர்த்து விளையாடிய வினேஷ் போகாத், 5க்கு 0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் இறுதிப் போட்டிக்கு தேர்வானது இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது.
இதைத்தொடர்ந்து முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், ராகுல்காந்தி எம்.பி. உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இன்று (ஆக.7) திடீரென்று 100 கிராம் எடை கூடுதலாக இருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில் வினேஷ் போகாத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த வீராங்கனைக்கு பல்வேறு தரப்பினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். தகுதிநீக்கத்தை எதிர்த்து இந்திய நாட்டின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வினேஷ் போகாத் பாரிசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் எடையை குறைக்க தீவிர பயிற்சி மேற்கொண்டதால் ஒரே இரவில் 1 கிலோ 850 கிராம் எடை குறைந்ததாக தெரிகிறது. மேலும் தீவிர பயிற்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு பிரச்சினைகளுக்கு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.