Share via:
விவசாயியை எட்டி உதைத்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்து வரும் ஊராட்சி செயலர் தங்பாண்டியனை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்று (அக்.2) தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் கூடின. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளத்திலும் கிராமசபை கூட்டம் கூடியது.
சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையிலான கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள், ஊரட்சி செயலர் தங்கபாண்டியன், கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது அம்மையப்பர் என்ற விவசாயி, ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை பார்த்து, ‘‘மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்து 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அவர் ஏன் இங்கு வந்திருக்கிறார்’’ என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், விவசாயி அம்மையப்பரை தனது காலால் எட்டி உதைத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்த அனைவர் மத்தியிலும் சலசலப்பை எழுப்பியது.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பேச்சுப்பொருளாக மாறியது. இதற்கிடையில் தங்கபாண்டியன் எட்டி உதைத்ததில் காயமடைந்த அம்மையப்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் திடீரென்று தலைமறைவாகியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட கிராம சபைக்கூட்டத்தில் விவசாயிக்கு பெரும் அவமானம் நிகழ்ந்துவிட்டதாக இந்த பிரச்சினை தற்போது பேச்சுப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
