Share via:
விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் நாளை (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
தி.மு.க.சட்டமன்ற வேட்பாளர் புகழேந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டியில் இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா போட்டியிட, பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேர்தல் அறிவிப்பு வெளிவந்த உடனேயே அறிவித்து போட்டிக்களத்தில் இருந்து விலகியது. இதனால் இடைத்தேர்தலில் தி.மு.க., பா.ம.க., நாம்தமிழர் என்ற மும்முனைப்போட்டி நிலவுகிறது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரையில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்கள் உள்ள நிலையில், 29 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். ஆகமொத்தம் 2,31,031 பேர் வாக்களிக்க உள்ளனர்.
தேர்தல் பிரசாரம் நேற்று (ஜூலை 8ம்தேதி) மாலையுடன் முடிவடைந்த நிலையில், அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்ட தேர்தலுக்கான அனைத்து பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் பணி தொடங்கியுள்ளது.
மேலும் விக்கிரவாண்டியில் 45 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டு வாக்குப்பதிவு பணிகள் கண்காணிக்கப்பட உள்ளன. அதேபோல் வாக்குப்பதிவு நாள் என்பதால் விக்கிரவாண்டியில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கல்வி நிறுவனங்களை பொறுத்த வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவரும் நாளை தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.