Share via:
வரும் 10ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கயிருக்கும் நிலையில்,
நேற்று முதல் தி.மு.க.வினர் பணம், டோக்கன், இலவசப் பொருட்கள் என்று அள்ளிக்கொடுக்கத்
தொடங்கிவிட்டார்கள். இதை காரணமாக வைத்து எப்படியாவது தேர்தலை தடுத்து நிறுத்த எதிர்க்கட்சிகள்
முயற்சி எடுத்துவருகிறார்கள்.
தி.முக.வின் 10 அமைச்சர்களும் முக்கியப் புள்ளிகளும் விக்கிரவாண்டியில்
தங்கி தீவிர பரப்புரை செய்கிறார்கள். வீட்டுக்கு வீடு சென்று நோட்டீஸ் கொடுக்கும் சாக்கில்
பணம், டோக்கன் கொடுக்கிறார்கள். திண்ணைப் பிரசாரம் செய்கிறார்கள். கடைசி நேரத்தில்
இன்னமும் அதிக பணம் கொடுக்கப்படும் என்றும் ஆசை காட்டப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அங்கு வேட்டி, சேலை ஆகியவை பிடிபட்டதை அடுத்து இலவசப்
பொருட்கள் வழங்குவதற்கு தி.மு.க. ஆர்வம் காட்டவில்லை. நேரடியாக பணம் கொடுப்பதையே மக்களும்
ரசிக்கிறார்கள் என்பதால் ஒவ்வொரு அமைச்சர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில்
போட்டி போட்டுக்கொண்டு செலவழிக்கிறார்கள்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 50 வாக்காளர்களுக்கு ஒரு திமுக
பிரமுகரை பொறுப்பாக நியமித்துள்ளனர். அந்த 50 வாக்களர்களுக்கும் தினமும் 200 ரூபாய்
கொடுத்து 4 மணி நேரம் அடைத்து வைக்கிறார்கள். இதற்காக, அந்த பொறுப்பாளர் இனிஷியலுடன்
கூடிய ஒரு டோக்கனை கொடுக்கிறார்கள்.
ஓட்டுக்கு ரூ. 5000 வீதம் 50 வாக்காளர்களுக்கு ரூ. 2,50,000 கொடுப்பது
மட்டும் ஒரு நிர்வாகியின் பொறுப்பு அல்ல. கூடவே, பாமகவினர் தேர்தல் பிரச்சாரத்துக்காக
அந்தந்த ஊர்களுக்கு வரும் நாட்களிலும், பாமகவின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள்
நடைபெறும் நாட்களிலும் மாலை 3.00 மணி முதல் இரவும் 7.00 மணி வரை வாக்காளர்களை அழைத்துச்
சென்று ஓரிடத்தில் அமரவைத்து ரூ. 200 கொடுக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
அதாவது, பாமகவின் பிரச்சாரத்துக்கோ, கூட்டத்துக்கோ வாக்காளர் செல்லாமல் தடுப்பதற்காக,
அவர்களை சும்மா அமரவைத்து ரூ. 200 கொடுப்பதற்காகவே, 50 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகியை
கூலிக்கு நியமித்து – இந்திய ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கியிருக்கிறது திமுக. விஞ்ஞானப்
பூர்வ ஊழலில் இருந்து விஞ்ஞானப் பூர்வ தேர்தல் மோசடிகளுக்கு முன்னேறியிருக்கிறது படுபாதக
திமுக! இப்படிப்பட்ட வெட்கம் கெட்ட அயோக்கியத்தனத்தை செய்து, தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே
பாழாக்கும் கேடுகெட்ட திமுக கும்பலுக்கு முடிவுகட்ட ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவரும்
முன்வர வேண்டும்
இந்த நிலையில் பணம் கொடுப்பதையும் டோக்கனையும் பா.ம.க.வினரும்
நாம் தமிழர் கட்சியினரும் போட்டோ எடுத்தும் வீடியோ எடுத்தும் வைரல் ஆக்கிவருகிறார்கள். அதேநேரம்
தேர்தல் ஆணையம் இவர்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் நேரடியாக
டெல்லிக்குப் புகார் அனுப்பும் திட்டத்தில் இருக்கிறார்கள்.
இத்தனை பணம் கொடுக்கும் தி.மு.க.வை எதிர்த்து வெற்றிபெற வாய்ப்பில்லை
என்பதால் தேர்தலை நிறுத்தி வைத்துவிட நினைக்கிறார்கள். அதேநேரம், தேர்தலை நிறுத்தினால்
அது, ‘ஜனநாயகப் படுகொலை நடக்கிறது’ என்று ஒதுங்கியிருக்கு அ.தி.மு.க.வுக்கு சாதகமாகிவிடும்
என்பதால் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்களாம்.