அமாவாசை நாளில் நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜூனா இணைந்துவிட்டதுடன், அவரது நிறுவனம் த.வெ.க.வுக்கு தேர்தல் வியூகம் அமைப்பதற்கு ஒப்பந்தம் நிறைவேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகனான ஆதவ் அர்ஜுனா. தனது வாய்ஸ் ஆஃப் காமன் என்ற தேர்தல் வியூக நிறுவனத்தின் மூலமாக விசிக மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார். இதற்காக ஆதவ் அர்ஜூனாவுக்கு விசிகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது.

அதன் பிறகு தி.மு.க.வில் கூட்டணி ஆட்சி வேண்டும் என்றும் தலித் முதல்வர் வேண்டும் என்றும் குரல் கொடுத்தார். விஜய் கூட்டணியில் திருமாவளவன் சேரவேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். இதையடுத்து எழுந்த குழப்பம் காரணமாக கட்சியில் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து கட்சியில் இருந்து வெளியேறினார் ஆதவ் அர்ஜூனா.

தி.மு.க.வை ஆட்சிப் பொறுப்பில் இருந்து அகற்றுவதற்காக அ.தி.மு.க.வில் பேச்சு நடத்தினார் ஆதவ். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே, விஜய் கட்சியில் இணைவதாக முடிவெடுத்தார். இதையடுத்து நேற்று அமாவாசை நல்ல நாள் என்பதால் விஜய் கட்சியில் இணைந்துவிட்டார். அதோடு வியூக அமைப்புக்கு ஒப்பந்தமும் நேற்று கையெழுத்து ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இத்தனை நாட்களும் விஜய்க்கு வியூகம் வகுத்துவந்த ஜான் ஆரோக்கியசாமியும் நீடிப்பார் என்றே சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா அமைதியாக இருப்பாரா அல்லது இங்கேயும் தலித் முதல்வர் என்று பஞ்சாயத்தைக் கூட்டுவாரா என்று புரியவில்லை. அதனாலே ஜான் ஆரோக்கியசாமிக்கும் இடம் இருக்கிறதாம். இரண்டு பேருக்கும் இடையில் இப்போதே புகைச்சல் ஆரம்பமாகியிருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link