Share via:
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தை திராவிட சாயல் பூசிய கட்சி என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்னதாகவே திராவிட சாயலில் பயணிப்பது போன்று தெரிகிறது. தமிழகத்திற்கு திராவிட சாயல் பூசிய மற்றொரு கட்சி தேவையில்லை. தேசிய சாயலில் மட்டுமே வேண்டும். இவற்றில் மாறுபட்டு விஜய் பயணிப்பார் என்று நினைத்தேன் என்று பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், திராவிட மாதிரி போன்றே பேசுகிறார். இப்போது விஜய்யின் சாயம் வெளுக்கிறதா? அல்லது வேறொரு சாயத்தை பூசுவாரா என்று எதிர்வரும் காலங்களில் தெரியவரும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜய் நீட் தேர்வு குறித்து அறிக்கை வெளியிட்ட போதும் கூட தமிழிசை சவுந்தரராஜன் அவரை கடுமையாக விமர்சனம் செய்தார். ஒரு விஷயம் முழுவதுமாக தெரியாமல் அறிக்கைவிடாதீர்கள் விஜய் என்று வெளிப்படையாக பேசினார். ஆரம்ப காலம் முதலே விஜய்யை குறிவைத்து தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம் செய்வதில் ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. அதாவது விஜய்யை பா.ஜ.க.வின் டீம் என்று விமர்சனம் செய்பவர்களுக்கு இவர்களின் அரசியல் மோதல் சரியான பதிலடியாகவே அமையும் என்கிறார்கள் விஜய் விசுவாசிகள்.