Share via:
பொதுவாக அரசியல் கட்சிகள் மாநாடு நடத்துவது என்றால் வெள்ளி, சனி,
ஞாயிறு ஆகிய தேதிகளையே தேர்வு செய்வார்கள். ஆனால், விஜய் முதன்முதலாக நடத்த இருக்கும்
மாநாடு திங்கள் கிழமை என்று உறுதி செய்யப்பட்டிருப்பது அவரது நிர்வாகிகளை குழப்பத்தில்
ஆழ்த்தியிருக்கிறது.
விஜய் கட்சியின் முதல் மாநாடு மதுரை அல்லது திருச்சியில் நடக்கும்
என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டியில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
எனவே, விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ம் தேதி நடிகர் விஜய் கட்சி முதல் மாநாடு நடத்த
அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார்.
விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேற்று எஸ்பி அலுவலகத்தில்
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமாலிடம் கொடுத்திருக்கும் மனுவில், ’’விக்கிரவாண்டியை
அடுத்த வி.சாலை கிராமத்தில் 23.9.2024 அன்று நடத்துவதாக திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை
முன்னெடுத்துள்ளோம். இந்த மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய் கலந்துகொள்கிறார். மாநாடு
நடத்துவதற்காக சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பை வாடகைக்கு பெற்றுள்ளோம்.
எங்கள் மாநாட்டிற்கு சுமார் 1.5 லட்சம் பேர் வருவார்கள் என்று
எதிர்பார்க்கிறோம். மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதிலிருந்தும் வரும் வாகனங்கள் அனைத்தையும்
முறையாக நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளோம். மாநாட்டிற்கு காவல்துறை
தரப்பிலிருந்து கொடுக்கும் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்றி பொதுமக்களுக்கு
எந்தவித இடையூறும் இல்லாமல் மாநாட்டை முறையாக நடத்துவோம். எனவே, மாநாட்டிற்கு தேவையான
முழுபாதுகாப்பு வழங்கிட வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
விஜய் கோரிக்கை ஏற்கப்படும் என்றே தெரியவந்துள்ளது. இந்த நிலையில்
திங்கள் கிழமை மாநாடு நடத்துவதற்கான காரணம் புரியாமல் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
விடுமுறையில் மாநாடு நடத்தினால் மட்டுமே நிர்வாகிகள், ரசிகர்கள் வந்து செல்வதற்கு எளிதாக
இருக்கும். அதேநேரம், பொதுமக்களுக்கும் தொந்தரவாகவும் இருக்காது.
இதற்கு காரணம் என்னவென்று விஜய்க்கு நெருக்கமானவர்களிடம் பேசுகையில்,
‘’விஜய் பிறந்த நாள், நட்சத்திரம் போன்றவைகளை வைத்து பிரபல ஜோதிடர் கணித்த நாளில் மாநாடு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட மாவட்டத்தில் மாநாடு நடத்த வேண்டும் என்பதும் அவரது
குறிப்புதான். இவர் தான் ஆளும் கட்சியின் தலைமைப் புள்ளியின் மனைவிக்கு ஜோதிடர்’ என்கிறார்கள்.
திங்கள் கிழமை என்றால் மக்களுக்கு தொந்தரவாக இருக்குமே என்று கேள்வி
எழுப்பப்பட்டதற்கு, ‘டிராஃபிக் ஜாம் ஆகுற அளவுக்கு நம்ம மாநாடு இருந்தாத் தான் தமிழ்நாடு
முழுக்க பரபரப்பாக பேசப்படும் என்று பதில் சொல்லப்பட்டதாம்.
தி.மு.க. ஆள் என்பதால் விஜய்யை திட்டமிட்டு கவிழ்த்துவிடக் கூடாது
என்று அவரது நிர்வாகிகள் பதட்டத்தில் இருக்கிறார்கள்.