Share via:
அனைத்து அரசியல் கட்சிகளும் மாநாடு நடைபெறும் வேலையைத் தொடங்குவதற்கு
முன்பு பந்தக்கால் நடுவது வழக்கம் தான். அது, நிகழ்ச்சியை நடத்தும் பகுதியின் பொறுப்பாளரும்,
மாநாட்டுக் குழுவினரும் சேர்ந்து சிம்பிளாக செய்து முடிப்பார்கள். ஆனால், தமிழக வெற்றிக்
கழகத்தின் பந்தக்கால் நடும் விழாவுக்கு பெரும் கூட்டம் கூடினாலும் போதிய ஏற்பாடுகள்
செய்யாத காரணத்தால் சொதப்பலில் முடிந்திருக்கிறது.
நடிகர் விஜய் கட்சியான தமிழக வெற்றிக் கழக மாநாடு இம் மாதம்
27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.. இதற்கான பந்தக்கால் நடும் விழாவில் நடிகர்
விஜய் பங்கேற்பதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. மாநாட்டுக்கு முன்பு செய்தியாளர்களை
சந்திப்பைத் தவிர்க்கும் வகையிலே விஜய் கலந்துகொள்ளவில்லையாம். இன்று காலை சரியாக காலை
4.50 மணிக்கு புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் சென்னை மாநாட்டு பந்தல் அமைப்பாளர் ஆனந்தன்
பந்தல் காலை நட்டார். கிறிஸ்தவர் விஜய்யை தலைவராகக் கொண்ட கட்சிக்கு அருணச்சலேஸ்வரர் சுவாமி படம், தேவாலய
தீர்த்தம், தர்கா புனித நீர் என்று மூன்று மதங்களின் சாஸ்திரப்படி கட்சியின் மாநாட்டுக்கு
பந்தக்கால் நடப்பட்டுள்ளது. புஸ்ஸி ஆனந்த் இனிப்பு வழங்கினார்.
இந்த மாநாட்டிற்கு கிட்டத்தட்ட 5 ஆயிரம் பேர் வந்திருந்தார்கள்.
ஆனால், ரசிகர்களுக்கு சேர், குடிநீர், வரவேற்பு உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.
பல்வேறு பகுதியில் இருந்து புனிதநீரை யாரும் பெற்றுக்கொள்ளவில்லை. குறிப்பாக புஸ்ஸி
ஆனந்த் யாரையும் வரவேற்கவும் சந்திக்கவும் இல்லை என்பதால் முதல் நாளிலே அனாதையாக்கப்பட்டது
போல் நிறைய ரசிகர்கள் திரும்பிச் சென்றார்கள். இந்த விழாவுக்கு வந்த சொற்பமான ரசிகர்களை
கவனிக்க முடியவில்லை என்றால் எப்படி மாநாட்டை நடத்த முடியும் என்ற கேள்வி நிறைய ரசிகர்ளுக்கு
எழுந்துள்ளது.
இந்த நிலையில் இன்று விஜய் விடுத்திருக்கும் அறிக்கையில், ‘’ நமது முதல் மாநில மாநாட்டுக்கான
கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம்,
ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து
கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில்
பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும்
நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும். நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள்
போல் சாதாரண இயக்கமன்று. இது ஆற்றல் மிக்கப் பெரும்படை இளஞ்சிங்கப் படை, சிங்கப் பெண்கள்
படை, குடும்பங்கள் இணைந்த கூட்டுப் பெரும்படை. ஆகவே, நம்மிடம் உற்சாகம் இருக்கலாம்.
கொண்டாட்டம் இருக்கலாம். குதூகலம் இருக்கலாம். ஆனால், படையணியினர் ஓரிடத்தில் கூடினால்,
அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும்
என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
. தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அன்று.
வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை நம்மை எடைபோடுவோரும்
இனிமேல் புரிந்துகொள்வர். மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களின் பொறுப்பாளர்களும் அதுசார்ந்த
சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றனர் என்பதையும்
தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
மாநாட்டுப் பந்தக்கால் நடுவதற்கு முன்பாகவே மாநாட்டுப் பணிக்குழு
அறிவிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், கட்சிப் பதவிகளுக்கு கடும் போட்டி இருப்பதால்
தேர்வு தள்ளிப் போகிறது. தலைமையிடம் இருந்து எந்த பணமும் எதிர்பார்க்காமல் செலவு செய்வதற்குத்
தயாராக இருக்கும் திடீர் ரசிகர்களுக்கு மட்டுமே பதவி வழங்குவதற்கு விஜய் விரும்புகிறார்கள்.
பணம் இல்லாத தீவிர ரசிகர்களுக்குப் பதவி கொடுத்தால், வசூல் நடத்தி கட்சிக்கு கெட்ட
பெயர் வாங்கிக் கொடுத்துவிடுவார்கள் என்பதால் இந்த முடிவுக்கு விஜய் வந்திருக்கிறாராம்…’’
தீவிர ரசிகர்களுக்கும் திடீர் ரசிகர்களுக்கும் ஆரம்பத்திலேயே மோதல்
ஆரம்பமாகிவிட்டது.