Share via:
அண்ணா தி.மு.க.வை இரும்புக் கோட்டையாக வைத்திருந்த தலைவி ஜெயலலிதாவிடம்
பேசுவதற்கு அந்த கட்சியின் தலைவர்கள் மட்டுமின்றி, கூட்டணித் தலைவர்களும், அதிகாரிகளும்
ரொம்பவே அச்சப்படுவார்கள். அவர் பேசுவதை மட்டுமே பிறர் கேட்க வேண்டும் என்று நினைப்பார்.
போயஸ் தோட்டத்தில் அமர்ந்துகொண்டு இங்கிலாந்து ராணி போன்று கட்சியையும்
ஆட்சியையும் நடத்தியவர் ஜெயலலிதா. சட்டசபையில் அவருக்கு எதிரே நின்று பேசுவதற்கு விருப்பமில்லாமல்
கருணாநிதி கூட அவைக்குப் போகாமல், கையெழுத்துப் போட்டுவிட்டு கிளம்பிவிடுவார்.
அப்படிப்பட்ட காலத்தில்தான், சட்டசபையில் மிருக பலத்துடன் ஆட்சியில்
அமர்ந்து முதல்வராக இருந்த ஜெயலலிதா முன்பு சண்டைக் கோழி போன்று சிலிர்த்து நின்றார்
விஜயகாந்த். அவர் நாக்கை கடித்து புருவத்தை சுளித்து பேசியதைக் கண்டு ஜெயலலிதா எத்தனை
தூரம் அச்சப்பட்டார் என்பதற்கு, அவர் அடுத்தடுத்து எடுத்த நடவடிக்கைகளே சாட்சி.
கூட்டணிக் கட்சி என்றும் பாராமல் தே.மு.தி.க.வை உடைத்து சுக்கு
நூறாக்கினார். விஜயகாந்தின் நண்பர்களை எல்லாம் விலை பேசி தன்னுடைய பக்கம் இழுத்துக்கொண்டார்.
அந்த துரோகத்தை ஜீரணித்துக்கொள்ள முடியாமல் தடுமாறினார் விஜகாந்த்.
ஜெயலலிதாவை நேரில் சந்தித்துப் பேசி இணக்கமாகப் போய்விடலாம்
என்று சசிகலா அழைத்தபோது, இனிமேல் ஜெயலலிதா முகத்தில் விழிக்கவே விரும்பவில்லை என்று
தடாலடியாகப் பேசி உறவை முறித்துக்கொண்டவர் விஜயகாந்த்.
ஜெயலலிதா மீது தீராப் பகை இருந்தாலும், அடுத்த தேர்தலில் தி.மு.க.வுடன்
கூட்டணி சேராமல் தனித்து நின்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு விஜயகாந்தே
காரணமானார் என்பதுதான் அவரது வாழ்க்கையின் கருப்புப் பக்கம்.
மக்களின் பேராதரவுடன் அரசியலில் சூறாவளியாக சுழன்று ஜெயிக்க
வேண்டிய நேரத்தில் கோட்டை விட்டதுதான் விஜயகாந்தின் அரசியல் தோல்விக்குக் காரணமாகிவிட்டது.
குட் பை கேப்டன்.

