Share via:
நடிகர் விஜய்யின் 68வது படத்திற்கான பூஜை நடந்து முடிந்த நிலையில் நாளை முதல் (அக்.3) படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்யின் 68வது படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ்மேனன் என மொத்த நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் லியோ வருகிற 19ம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த (செப்.) 30ம் தேதி சென்னை உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியான நிலையில் திடீரென்று ரத்து செய்யப்பட்டது.
இதனால் கவலையடைந்த விஜய் ரசிகர்களுக்கு தற்போது ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. அதாவது இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்68 திரைப்படத்திற்கான படப்பூஜை எளிய முறையில் நடந்து முடிந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகள் கழித்து விஜய் திரைப்படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், நடிகர் அரவிந்த்சாமி, ஜோதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படப்பூஜையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ விஜயதசமியன்று படத்தின் அறிவிப்புடன் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

