Share via:
விஜய் டெல்லிக்கு வருகையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய
வேண்டும் என்று த.வெ.க.வினர் வைத்த கோரிக்கையை டெல்லி அரசும் சிபிஐயும் கொஞ்சமும் கண்டுகொள்ளவே
இல்லை. அதேபோன்று விசாரணைக்கு வந்த விஜய்யையும் ஒரு சாதாரண விசாரணைக் கைதி போன்று அலட்சியமாகவே
டீல் செய்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில்
நடந்த பிரசாரப் பயணத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில்
சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜனவரி 12-ம் தேதி விஜய்யிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
விசாரணைக்காக ஜனவரி 12-ம் தேதி காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகி உள்ளார்.
இதற்காக 12-ம் தேதி தனி விமானத்தில் டெல்லி
சென்ற விஜய்யுடன் தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு
பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணைபொதுச்செயலாளர் நிர்மல் குமார், இணை பொருளாளர்
ஜெகதீஷ் பழனிசாமி, உதவியாளர் ராஜேந்திரன்,
விஷ்ணு ரெட்டி, பாதுகாப்பு அதிகாரி நயீம் ஆகியோரும் உடன் சென்றனர்.
சிபிஐ அதிகாரி சுனில் குமார் தலைமையிலான குழு, விஜய்யிடம் விரிவான
விசாரணையை மேற்கொண்டது. குறிப்பாக, கூட்டம் நடைபெறவிருந்த இடத்திற்கு விஜய் காலதாமதமாக
வந்ததற்கான காரணம் என்ன? தாமதம் காரணமாக நிகழ்வின் மேலாண்மை பாதிக்கப்பட்டதா? மக்கள்
மயக்கமடைந்து விழுந்தபோதும் ஏன் உரையை நிறுத்தவில்லை,? கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலை
கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டதாக
கூறப்படுகிறது.
மேலும், கூட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் குறித்து உடனடியாக
காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான சூழ்நிலை எப்போது
தெரிய வந்தது? அதனைத் தடுக்கும் வகையில் உங்கள் தரப்பில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
என்ன? என்பன உட்பட சுமார் 100 கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த உயிரிழப்புகள் நிகழ்வில் ஏற்பட்ட காலதாமதம்
மற்றும் நிர்வாக குறைபாடுகளால் ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றதாக தகவல்
வெளியாகியுள்ளது. சுமார் 7 மணிநேரம் விசாரணை நடந்த நிலையில் அடுத்த நாளும் விசாரணைக்கு
வருமாறு சிபிஐ அதிகாரிகள் கூறிய நிலையில் பொங்கலுக்கு பிறகு அடுத்தகட்ட விசாரணையை வைத்துக்கொள்ளலாம்
என விஜய் கூறியதால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விசாரணை
கிட்டத்தட்ட மிரட்டல் தொனியில் நடைபெற்றதாகவே கூறப்படுகிறது.
அடுத்த நாளில் விசாரணை இல்லை என்று தெரிந்தும், 12-ம் தேதி விஜய்
சென்னைக்கு திரும்பவில்லை. அன்று இரவு டெல்லியில் தங்கிவிட்டு அடுத்த நாள் காலையில்தான் அவர் சென்னைக்கு திரும்பினார். கூட்டணி குறித்த
சில ஆலோசனைகளுக்காகவே அவர் டெல்லியில் உள்ள சொகுசு ஓட்டலில் 12-ம் தேதி இரவு தங்கினார் என்று கூறப்படுகிறது.
ஜனநாயகன் விவகாரம், தேர்தல் சின்னம் விவகாரம் தொடர்பாகவும்
12-ம் தேதி இரவு அவர் முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளார். இரவில் வெகுநேரம் வரை இந்த ஆலோசனை
நடந்துள்ளது. இது தவிர, தேர்தல் கூட்டணி ஆலோசனையும்
நடந்துள்ளது. இது தொடர்பாக சில அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்
தெரிகிறது.
இந்த நிலையில் விஜய் சென்ற விமானம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் இருந்து FLY SBS என்ற நிறுவனத்தின் எம்ப்ரேர் லெகசி 600 என்ற சொகுசு விமானத்தில்
விஜய் டெல்லிக்கு சென்றார். விஜய் சென்ற விமானம் வழியில் எங்கும் நிற்காமல் ஐந்தாயிரத்து
500 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கக் கூடியது என தகவல் வெளியாகி உள்ளது.
மொத்தம் 13 பேர் வரை அமரக்கூடிய சொகுசு விமானத்தில் ஒரு மணி நேரத்திற்கு
இரண்டரை லட்சம் முதல் ஐந்து லட்ச ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாகி
உள்ளது.
விமானக் கட்டணம் தவிர்த்து விமான நிலையத்தில் நிறுத்துவதற்கான
கட்டணமும் விஜய் செலுத்த வேண்டும் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த விமானத்தை ஒருநாளைக்கு
வாடகைக்கு எடுக்க 20 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகும் என்கிறார்கள்.