Share via:
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் ‘ட்ரெய்ன்’ படத்திற்கான படப்பூஜை இன்று நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி அடையாளம் தெரியாத அளவுக்கு நியூலுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
கதாநாயகன், வில்லன் என பல்வேறு கதாபாத்திரங்களில் மிரட்டி வரும் விஜய்சேதுபதியின் மார்க்கெட் ஜவான் திரைப்படத்திற்கு பிறகு அதிகரித்துள்ளது. இருப்பினும் வில்லன் கதாபாத்திரத்தில் நிறைய காட்சிகள் கத்திரிக்கப்படுகின்றன என்றும் கதாநாயகனை விட வில்லன் குறைந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது என்று கூறிய அவர், இனி வில்லனாக நடிக்கப் போவதில்லை என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘ட்ரெய்ன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார் விஜய்சேதுபதி. இப்படத்திற்கான பூஜை இன்று தொடங்கிய நிலையில், ஒரு ரெயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்ததுதான் இந்த கதை என்று தெரியவந்துள்ளது.
ட்ரெய்ன் படத்திற்கான உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள விஜய்சேதுபதி, நியூ லுக்கில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இத்திரைப்படத்தில் டிம்பிள் ஹயாதி, ஈரா தயானந்த், நாசர், வினய்ராய், பாவனா, சம்பத்ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகிசேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது.
இத்திரைப்படத்திற்கு இசை மிஷ்கின். இன்று காலை நடைபெற்ற படபூஜையின் போது இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

