Share via:
அறிக்கை மூலமே கட்சி நடத்திவரும் விஜய் மீண்டும் ஒரு அறிக்கை மூலம்
அவரது ரசிகர்களை களத்தில் இறக்கி விட்டுள்ளார். தற்போது உலகளாவிய பட்டினிக் குறியீட்டில்
28.7 புள்ளிகள் பெற்று இந்தியா 111வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பட்டினி
இல்லா உலகம் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் மே 28ம் தேதி உலகப்
பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.
உலகப் பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28-ம் தேதி தமிழ்நாடு
முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்களுக்கு
அன்னதானம் வழங்கவேண்டும் என்று விஜய் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த்
வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா
உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி,
உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற
தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி
நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப்
பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”
என தெரிவித்துள்ளார்.
வட மாநிலங்களில் இன்னமும் பட்டினி நிலவுகிறது. தமிழகத்தில் அப்படியொரு
நிலை இல்லை. ஆனாலும் உலகப் பட்டினி தினத்தைக் கொண்டாட வேண்டும் என்றால் பிரியாணி விருந்துக்கு
ஏற்பாடு செய்யுங்கள் என்று தி.மு.க..வினர் கிண்டலாக கோரிக்கை வைத்து வருகிறார்கள்.