Share via:
திமுகவில் வாய்ப்பு இல்லை எனும் பட்சத்தில் அதிமுகவில் ஐக்கியமாக
வேண்டும் என்பதுதான் பிரேமலதாவின் எண்ணம். தங்கள் பலத்தைக் கூட்டிக் காட்ட வேண்டும்
என்பதற்காக விஜய் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக அவ்வப்போது பேசிக்கொண்டு
இருந்தார்.
இதையடுத்து பிரேமலதா எங்கே போனாலும் அவரிடம் விஜய் பற்றி கேள்வி
எழுப்புவதும் அவர் பதில் சொல்வதுமாக இருந்தார். ஆனால், விஜய் தவிர வேறு எதுவும் கேட்பதில்லை
என்பதுடன் டென்ஷாகிவிட்டார்.
நெல்லை வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று, ‘’நாடு முழுவதும்
வாக்கு திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் வாக்கு திருட்டு நடப்பது
இப்போதுதான் தெரிய வந்துள்ளது. தேர்தலிலும் துஷ்பிரயோகம் நடக்கிறது. தேர்தல் ஆணையமும்
நீதிபதிகளும் இணைந்து ஜனநாயக நாட்டில் முறையாக தேர்தலை நடத்த வேண்டும். அப்போதுதான்
தேர்தலில் நிற்பதற்கும், தேர்தலில் போட்டியிடுவதற்கும் வழிவகை கிடைக்கும். கண்கூடாக
வாக்குக்கு காசு கொடுப்பது தெரிகிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பீகார்
மட்டுமல்ல இந்தியா முழுவதும் சீர்திருத்தம் வரவேண்டும். சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கு
9 மாதம் உள்ளது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்…’’ என்றவரிடம்
விஜய் பற்றி கேள்வி எழுப்பினார்கள்.
உடனே அவர், ‘’தமிழகம் முழுவதும் நாள்தோறும் பத்திரிகையாளர்களை
சந்திக்கிறோம். விஜய் குறித்த கேள்வியை தவிர்த்து மற்ற கேள்விகள் என்னிடம் கேட்பதில்லை.
விஜய் குறித்தும் கூட்டணி குறித்தும் இனி என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம்..’’
என்று பெரிய கும்பிடு போட்டுவிட்டார்.