Share via:
விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் உறுப்பினராக சேர விஜய்யின் ரசிகர்கள் மற்றும் விசுவாசிகள் ஒரே நேரத்தில் ஆர்வம் காட்டியதால் சர்வர் முடங்கியது. இதனால் கட்சியில் சேர முயற்சித்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் விஜய் தனது தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தமிழக திராவிட கட்சிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டும் வகையில் அவரின் ஒவ்வொரு அசைவும் நாளுக்கு நாள் வீரியமடைந்து வருகிறது.
கட்சி தொடங்கிய ஒரே மாதத்தில் 75 லட்சம் கட்சியில் புதிதாக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
த.வெ.க.வின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் புஸ்சி ஆனந்தும், ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் இணைந்து அடிக்கடி கூட்டங்களை நடத்தி, த.வெ.க.வை 2026ம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் அமரவைப்பதற்கான அனைத்து அரசியல் வியூகங்களையும் வகுத்து வருகின்றனர்.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் மாதம் 27ம் தேதி அக்கட்சியின் முதல் மாநில மாநாடு வரலாறு காணாத வகையில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
மாநில மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ள மேலும் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஒரே நேரத்தில் செயலி மூலம் இணையதளத்தில் த.வெ.க. கட்சியில் இணைவதற்காக விண்ணப்பித்த நிலையில் செயலியின் சர்வர் முடங்கிப் போனது. சர்வர் கோளாறு காரணமாக கட்சியில் சேர முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து அக்கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘சர்வர் முடக்கம் இன்னும் சில நாட்களில் சரி செய்யப்படும். அதைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் தங்களை த.வெ.க.வில் இணைத்துக் கொள்ளலாம். இதற்கிடையில் புதிய உறுப்பினர்கள் குறித்து நாங்களும் தகவல்களை சேகரித்து வருகிறோம். செயலி சரியானதும் உறுப்பினர் சேர்க்கை மீண்டும் தொடரும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.